உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

உபுண்டு தமிழ்க் குழுமம், இந்தியன் லினக்ஸ் பயனர் குழு, சென்னை, எம். ஐ. டி கணினிச் சங்கம் ஆகியன இணைந்து கடந்த 21/07/2012 அன்று உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டத்தினை நடத்தின .

நிகழச்சியினை கல்லூரியின் டீன் முனை. எஸ். தாமரைச் செல்வி தொடங்கி வைத்தார்.

கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினர்..

தொடர்ந்து யோகேஷ் உபுண்டு 12.04 இன் வியத்தகு விஷயங்களை வருகை தந்தோருக்கு எடுத்துரைத்தார் செய்தும் காட்டினார். தொடர்ந்து மாணவர்களுக்கு கட்டற்ற மென்பொருளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ம. ஸ்ரீ ராமதாஸ் பேசினார்.

பிற்பாடு உபுண்டு 12.04 வெளியிடப்பட்டது. கணினித் துறைத் தலைவர் கேத்தரீன் பீனா உபுண்டு 12.04 தனை வெளியிட்டார்.

கேத்தரீன் பீனா கொடுக்க ஆமாச்சு பெற்றுக் கொள்கிறார். அருகில் யோகேஷ்.

நிகழ்ச்சிக்கு குரோம்பேட்டைக்கு அருகாமையில் அமைந்துள்ள பள்ளி கல்லூரிகளில் இருந்நது பல மாணவர்கள் வருகைபுரிந்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வினால் பலனடைந்தனர்.

நிகழ்ச்சி செவ்வனே நிறைவுற்றதோடு மட்டுமல்லாது மேற்கொண்டு ஒவ்வொரு மாதமும் மாணவர்கள் பயனுற வேண்டி மூன்றாவது சனிக்கிழமைகளில் கட்டற்ற நிரலாக்க வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்புக் குழு மாணவர்கள்..

ஒருங்கிணைப்புக் குழு மாணவர்கள்..

எம். ஐ. டி மாணவர்களின் சீரிய முயற்சியில் நடைபெற்ற இந்நிகழ்விற்காக அவர்களை உளமார பாராட்டுவோம். ILUGC தளத்தில் இது பற்றிய பதிவு: http://ilugc.in/content/event-report-ubuntu-12-04-release-party/ நிகழ்வின் போது எடுத்த படங்கள்:  https://picasaweb.google.com/102002010785949271518/UbuntuReleaseParty2012

உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

டெபியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உபுண்டு இயக்குதளம் இன்று கட்டற்ற இயக்குதளங்களுள் முன்னோடியாகத் திகழ்வதை நாம் அறிவோம். அதன் நீண்ட கால ஆதரவு அடிப்படையிலான வெளியீடு 12.04 அண்மையில் நிகழ்ந்தது.

அதன் குணங்களை எடுத்துரைக்கும் வண்ணமும் கட்டற்ற மென்மக் கோட்பாட்டை பறைசாற்றும் முகமாகவும் சென்னை எம். ஐ. டி மாணவர்களுடன் இணைந்து உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

 • இடம்: எம். ஐ. டி, குரோம்பேட்டை, சென்னை
 • தேதி: 21/07/2012 நேரம்: மாலை 1 மணி முதல் 4 வரை
 • நிரல்:
  • கட்டற்ற மென்மக் கோட்பாடு பற்றிய அறிமுகவுரை
  • உபுண்டு 12.04 தரும் வசதிகள் பற்றிய விளக்கவுரை
  • உபுண்டு நிறுவும் வழிமுறைகள் செய்முறை விளக்கம்
 • சிறப்பம்சங்கள்
  • நிகழ்வின் ஒரு பகுதியாக மடிணிகள் கொண்டு வந்து உபுண்டு நிறுவிக் கொள்ள ஏற்பாடு.
  • உபுண்டு சிடி – டிவிடி வேண்டுவோருக்கு முறையே ரூ. 20/- & ரூ 30/- விலைக்கு அவற்றைப் பதிந்து வழங்க ஏற்பாடு.
  • iso இமேஜாக தத்தமது USB டிஸ்குகளை கொண்டு வந்து ஆர்வமுடையோர் இலவசமாகவும் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு.

வாருங்கள் உபுண்டுவோடு ஓர் உன்னத மாலைப் பொழுதிற்கு!

ஏற்பாடு: இந்தியன் லினக்ஸ் பயனர் குழு, சென்னை – உபுண்டு தமிழ்க் குழுமம் – எம் ஐ டி கணினிச் சங்க தன்னார்வலர்கள்.

செயற்திட்டம்…

உபுண்டு 12.04 வெளியீட்டு கொண்டாட்டம் ஒன்று நடத்த வேண்டும். ILUGC யிலும் இது குறித்து விவாதங்கள் போகின்றன. இணைந்து செய்யப்பார்க்கலாம். சிங்கை இலங்கை உள்ளிட்ட பிற இடங்களிலும் கொண்டாடலாம். அங்கிருப்போர் தெரியப்படுத்துங்கள்.

இதுவரை லாஞ்சுபேட் குழுவில் இணைய/ இணைக்க எந்த வித எதிர்பார்ப்புகளும் நாம் வைத்ததில்லை. இனி அவ்வாறு அல்லாது இணைவோர் உபுண்டு தமிழ்க் குழுமத்தின் வாயிலாக என்ன மேற்கொள்ள விழைகின்றனர் என்பதை விவரிக்க வேண்டும். பிற்பாடு மாதாந்திர ஐ ஆர் சி உரையாடலில் கலந்து கொண்டு அவற்றை மேற்கொள்ள விழையும் வழிமுறைகளை மற்றோருக்கு அறியத் தர வேண்டும். தொடர்ச்சியான சிறிய அளவிலான பங்களிப்பேனும் தருவது நல்லது. இப்போதைக்கு இருப்போரது நிலையில் மாற்றங்கள் ஏதும் இல்லை.

மொழிபெயர்ப்பு – ஆவணமாக்கம் போன்றவை முக்கியம். இதெற்கென ஒரு குழு வேண்டும்.

இவற்றைத் தாண்டி – வீடியோ ஆடியோ டுடோரியல்கள் செய்ய வேண்டும். – இதெற்கெனவும் குழு வேண்டும்.

நம்மில் சிலர் உபுண்டு உருவாக்குநர் ஆக முன்வர வேண்டும். உபுண்டு உருவாக்குநர் ஆகிக் காட்டுவதோடு அடுத்த எல் டி எஸ் வரும் போது தமிழ் வழியில் பயின்று உபுண்டு உருவாக்குநர் ஆன இரண்டு மூன்று பேரையாவது நாம் உருவாக்கிக் காட்ட வேண்டும். இதற்கு வேண்டியனவற்றை கொணர யாவர்க்குமான அறக்கட்டளையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

என்னென்ன பயன்பாடுகள் தேவைப்படுகின்றன என்பதை பட்டியலிட்டு அவற்றை உருவாக்க செயற்திட்டம் வகுத்து செய்ய வேண்டும். அவை உருவாக்கப்பட்டு உபுண்டு ரெபாசிட்டரியில் இடம்பெறும் அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும். நிரலாக்க குழு ஒன்று அமைக்க வேண்டும். வேண்டிய வளங்களைத் திரட்ட யாவர்க்கும் அறக்கட்டளையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வழுக்கள் தெரிவிப்பது – வழுக்கள் களைவதற்கு நம்மில் ஒரு குழு வேண்டும்.

வரவேற்பு குழு ஒன்று அமைத்து புதிதாக வருவோருக்கு கனிவுடன் வழிகாட்ட வேண்டும்.

கல்லூரிகள் பள்ளிகள் பொது மன்றங்களில் உபுண்டு பற்றிய அறிமுக வகுப்புகளை நடத்தலாம். நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்த ஒரு குழு இருத்தல் நல்லது.

தொழில் ரீதியான உபுண்டு பயிற்சி மையங்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

கேள்வி-பதில் வடிவில் எப்படிச் செய்வது வடிவில் தளமொன்றை கொண்டு வரலாம்.

மாவட்டம் தோறும்/ ஊர் தோறும் உபுண்டு தமிழ்க் குழும மன்றங்கள் அமைக்கலாம்.

உபுண்டு தமிழ்க் குழுமத்திலிருந்து அடுத்த ஆண்டிற்குள் ஐந்து உபுண்டு உறுப்பினர்களையாவது உருவாக்கிக் காட்ட வேண்டும்.

உபுண்டு தமிழ்க் குழுமம் புத்துயிர் பெறுகிறது..

உபுண்டு தமிழ்க் குழுமம் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாய் தொய்வு பெற்றிருந்தாலும் மீண்டும் 12.04 வெளியீடு தொடங்கி தமது பணிகளை முடுக்கிவிடவுள்ளது.

கடந்த காலங்களில் தங்களின் மேலான ஆதலவை நல்கியது போலவே இனியும் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு வித்திடுங்கள். கட்டற்ற இயக்குதளங்களின் மலரச்சி சமூகத்தின் மலர்ச்சி.