கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு - திருக்கோணமலை

கடந்த மார்ச் மாதம் 28ம் நாள் இலங்கை - திருக்கோணமலை லியோ கழகத்தினதும் (Leo club of Trinco new city) MIC Computers நிறுவனத்தினதும் அனுசரணையில் கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் சம்பந்தர் மண்டபத்தில் கட்டற்ற மென்பொருள் தொடர்பான அறிமுகக் கருத்தரங்கு நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இக்கருந்தரங்கில் இறுதிவரை ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். கருத்தரங்கின் முன்பாதியில் பெரும்பாலும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் தொடர்பான சித்தாந்த ரீதியான அறிமுகங்களும் விளக்கங்களும் இடம்பெற்றன. கவனம் சிதறாமல் இவ்விஷயங்களைக் கேட்டுக்கொண்டிருந்து கேள்வி நேரத்தில் தத்துவம் சார்ந்த பல கேள்விகளையும் கேட்கத்தொடங்கினார்கள்.

திருக்கோணமலையில் இடம் பெறும் கட்டற்ற மென்பொருள் தொடர்பான முதல் கருத்தரங்கு இதுவேயாகும். கலந்துகொண்ட பலர் லினக்ஸ் என்ற சொல்லையே அன்றுதான் முதன் முறையாகக் கேள்விப்படுபவர்களாகவும் இருந்தனர்.

இக்கருத்தரங்கில் வழங்கப்படுவதற்கென "உபுண்டு க்னூ/லினக்ஸ் திருக்கோணமலைப் பதிப்பு" என்ற பெயரில் தனியான வழங்கல் ஒன்று வடிவமைக்கப்பட்டது. கருத்தரங்கின் இரண்டாம் பாதி இவ்வழங்கலை அடிப்படையாகக்கொண்ட செயன்முறை விளக்கங்களாகவே அமைந்திருந்தது. பொதுவான மாற்று மென்பொருட்கள், தமிழ்ப்பயன்பாடு, நிறுவல் போன்றவை இவ்வழங்கலை அடிப்படையாக்கொண்டு விளக்கப்பட்டது.

இக்கருத்தரங்கின் வெற்றி அடுத்தடுத்து இப்பரப்பில் தொடர்ச்சியான கருத்தரங்குகளைப், பயிற்சிப்பட்டறைகளை நடத்துவதற்கான தளத்தையும் அமைத்துத்தந்துள்ளது. திருக்கோணமலையை அடிப்படையாகக்கொண்டு க்னூ/லினக்ஸ் பயனர் குழுமம் ஒன்றினை தொடக்கி வைக்கக்கூடிய புறநிலைகளும் கனிந்து வந்துள்ளன.

கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கு லியோ கழகத்தினரால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உபுண்டு க்னூ/லினக்ஸ் திருக்கோணமலைப்பதிப்பின் வட்டுக்களும், நான்குபக்கக் கையேடு ஒன்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன.

இவ்வெற்றியில் பெரும்பங்கெடுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், குறிப்பாக மயூரன், ஜெகந்த் நன்றிக்குரியோர்.

மூலம்: http://tamilgnu.blogspot.com/2009/04/blog-post.html