கோளரங்கம்


இந்த பயர்பாக்ஸ் வந்ததில் இருந்து மற்ற உலாவிகள் பக்கம் திரும்பவே முடிவதில்லை,ஒவ்வொரு நாளும் ஆச்சரியமூட்டும் அளவுக்கு விபரங்கள் அடங்கியுள்ள ஒரு உலாவி என்றால் மிகையில்லை.இதெல்லாம் தான் எல்லோரும் தெரியுமே,புதுசா ஏதாவது இருக்கா என்று கேட்கிறீர்களா? இல்லாமலா!

இந்த உலாவியின் வலது பக்கத்தில் கூகிளுக்கான தேடுபொறி இதோடு சேர்ந்துவருவது தெரிந்ததே அதை உபயோகப்படுத்தும் போது பெறும்பாலும் ஆங்கிலத்திலேயே விபரங்கள் ஆங்கில பக்கத்திலேயே வரும்.இது எல்லாம் நீங்கள் வசிக்கும் தேசத்தை பொருத்தது.இங்கு துபாயில் அதை உபயோகபடுத்தும் போது அந்த பக்கத்தின் முகப்பில் ஒரே அராபிக் மொழியில் இருக்கும்,இது உள்ளூர்காரர்களுக்கு வசதி ஆனால் நம்மைப் போன்றவர்களுக்கு இது தலைவலி.இதை ஆங்கிலத்துக்கு கொண்டுவர அங்கு சுட்டி ஒன்றும் இல்லாத பட்சத்தில் கூகிளாரிடமே அடைக்கலம் அடைந்தேன்.விடைகள் பல இருந்தாலும் இது தான் சரியாக இருக்கும் என்ற குத்துமதிப்பில் இதை செயல்படுத்தினேன்,வெற்றியும் கிடைத்தது.

நீங்கள் வெளிதேசத்தில் அதுவும் ஆங்கில பேச்சு மொழி வழக்கில் இல்லாவிட்டால் இம்முறை உங்களுக்கு பயனளிக்ககூடும்.

ஆதாவது பயர்பாக்ஸ் இருக்கும் கோப்பின் உள்ளே searchplugin என்ற பொட்டி உள்ளே google.xml என்ற கோப்பை திறந்து அதில் உள்ள கடைசி வரியில் உள்ள firefox ஐ நீக்கிவிட்டி ncr (No Country Restriction) என்று போட்டுவிட்டால் முடிந்தது.

படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கிப்பாருங்கள்.


இந்த வின்டோஸில் இல்லாத மென்பொருளே கிடையாது போலும் இருந்தாலும் அதை ஒவ்வொன்றாக வாங்கி வாங்கியே நம்முடைய கணினி வாங்கிய செலவு போல் 2 மடங்குக்கு வாங்கவேண்டி வரும்.சில மென்பொருட்கள் இலவசமாக கிடைத்தாலும் அது நம் தேவையை பூர்த்தி செய்யுமா? என்று வாங்கும் முன்பே சொல்ல முடியாது,என்ன தான் முன் பதிவு மென்பொருள் உபயோகித்து பார்த்துவிட்டு வாங்கினாலும் பிற்கால தேவைக்கு ஈடு கொடுக்கும் என்ற உத்திரவாதமும் இருக்காது.இப்படிப்பட்ட நிலையில் லினக்ஸுக்கு மாற்று இது வரை என் கண்ணில் படவில்லை.

ஒரே ஒரு உதாரணம் பார்க்கலாம்.

PDF- இவ்வகை கோப்புகளை நம்மில் பலரும் உபயோகித்திருக்கலாம்.அதன் பயன்பாடுகளில் மிக முக்கியமானது அதன் அளவு.மிகக்குறைந்த அளவில் பரிமாறிக்கொள்ள வசதியாக உள்ள ஒரு கோப்பு இது.

சில சமயங்களில் இணையத்தில் இருந்து இறக்கிய கோப்பு அளவில் கூடுதலாகவும் அதே சமயத்தில் பல பக்கங்களை கொண்டதாகவும் இருப்பது பல விதங்களில் தொந்தரவாகவும் இருக்கும்.இந்த கோப்பையே சில பக்கங்கள் உள்ள தொகுப்பாக மாற்ற முடிந்தால்... சௌகரியம் தானே.இந்த மன நிலையில் தேடிக்கொண்டிருந்த போது கிடைத்த ஒரு மென்பொருள் (இலவசம்) pdftk என்பதாகும்.இதற்கு GUI (Grraphical User Interface) கிடையாது,எழுத்து வடிவில் நம்முடைய கட்டளையை கொடுத்தால் அதுவே பிரித்துக்கொடுத்து விடும்.

ஆமாம்,இக்கட்டளைகளை எப்படி அறிந்துகொள்வது?

இது எல்லாவற்ருக்கும் கீழே உள்ள படத்தை சொடுக்கி பெரிதாக்கி தெரிந்துகொள்ளுங்கள்.

ஆதாவது பல பக்கங்களை கொண்ட ஒரு pdf (mergepdf) என்ற கோப்பை முதல் பத்து பக்கங்களை மட்டும் கொண்ட மற்றொரு புதிய கோப்பாக split.pdf என்று ஏற்படுத்திக்கொண்டேன்.இம் மென்பொருளில் மேலும் பல வித உத்திகளை கையாள வசதி செய்துகொடுத்துள்ளார்கள்,அததனையும் இலவசமாக.ஆர்வம் உள்ளவர்கள் முயன்றுபாருங்கள்.

உபுண்டு லினக்ஸ் உபயோகப்படுத்துபவர்கள் இதை synaptic Package Manager மூலம் நிறுவிக்கொள்ளலாம்.

ரொம்ப நாளாக இந்த பக்கமே வரமுடியலை ஏனென்றால் மடிக்கணினி உபயோகிக்க வேண்டிய நிலை அதோடு அதில் இருக்கும் Winxp யில் கைவைக்க மனது வரவில்லை.

இருந்தாலும் அரிக்கும் கையை சொறியாமல் இருக்க முடியாதே!! உபுண்டு 8.10 ஐ வின்டோஸுக்கு பக்கத்திலேயே நிறுவினேன்.

மேலே போவோம்.

தலைப்பை பார்த்து பயந்திடாதீங்க,இது ஒரு மென்பொருளின் பெயர் அதுவும் .avi ஆக இருக்கும் கோப்பை நமக்கு வேண்டிய வேறு வித கோப்பாக மாற்றிக்கொடுக்கும் மென்பொருள்.இது கமென்ட் லயன் என்பதால் கொஞ்சம் யோசித்தேன் ஆனால் எப்போதோ மயூரன் எழுதிய பதிவும் அங்கும் இங்கும் படித்த பக்கங்கள் மூலம் முயற்சிக்கலாம் என்று இறங்கி வெற்றியும் பெற்றேன்.

உங்களிடம் உள்ள Synaptic Package Installer மூலம் இந்த மென்பொருளை தேடி நிறுவிவிடுங்கள்.அதன் பிறகு டெர்மினலை ஆரம்பித்து அதில்

ffmpeg man என்று கொடுத்து என்டரை அமுத்தவும்.இந்த மென்பொருள் என்னென்ன வேலை செய்யும் என்று எழுத்து மூலம் விளக்கியிருப்பார்கள்,மிக எளிமையாக.

நான் என்ன பண்ணினேன் என்பதை கீழுள்ள படத்தை சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.

வெகு விரைவாக முடித்து அதையும் டெஸ்க் டாப்பில் போட்டுவிட்டது.

இப்பதிவு கட்டற்ற மென்பொருளோடோ க்னூ லினக்சோடோ நேரடியான சம்பந்தமுடையதல்ல.

ஆனால் கணிமை உலகின் கவனிக்கத்தகுந்த மாற்றங்களுள் ஒன்றினை இச்செய்தி குறிகாட்டுவதாகப் படுவதால் இங்கே பகிரப்படுகிறது.

கூகிள் தேடுபொறியின் படங்களைத்தேடும் பொறியில் புதிய வசதி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.

நீங்கள் தேடும் குறிச்சொல்லுக்கான கோட்டுப்படம் வேண்டுமா, ஒளிப்படம் வேண்டுமா, Clip art வேண்டுமா அல்லது முகங்கள் வேண்டுமா எனத் தேடு பொறிகொண்டு தீர்மானிக்கக்கூடிய வசதிதான் அது.

இதுவரை காலமும் தேடு பொறிகள் எழுத்துக்களை மட்டுமே வாசித்தன. பின்னர் அண்மையில் படங்களாக உள்ள எழுத்துக்களை ஒளிசார் எழுத்துணரி கொண்டு வாசித்துத் தேடும் வசதிகள் பரீட்சிக்கப்பட்டன. ஆனால் அதுவும் கூட எழுத்துக்கள் தொடர்பானதே.

தற்போது வந்திருக்கும் இந்த வசதி படங்களை வாசிக்க தொடங்கியிருக்கிறது.

படவுணர்தல் (Image Recognition) தொழிநுட்பம் புதியதல்ல. ஒத்த படங்களைத் தேடிக்கண்டறியவும் படத்தின் நிறங்களை முடிந்தவரை ஆய்ந்தறியவும் வல்ல மென்பொருட்கள் பயன்பாட்டிலுள்ளன.

எனது கணினியிலும் கூட அவ்வப்போது ஒத்த படங்களைத் தேடிக் களைய இவ்வாறான கருவிகளைப் பயன்படுத்தியுள்ளேன்.

கூகிள் குரோம் வெளியிடப்பட்டபோது, தன்னியக்க முறையில் மில்லியன் கணக்கான வலைப்பக்கங்களுடன் அதனைச் சோதனை செய்ய இவ்வாறான படவுணர்தல் தொழிநுட்பமே பயன்படுத்தப்பட்டதாக அதன் ஆவணங்களில் தெரிவித்திருந்தார்கள்.

படங்களின் hash பெறப்பட்டு அது ஒப்பிடப்படுதல்.

இதன் அடுத்த படிக்கே கூகிள் இப்போது நகர்ந்திருக்கிறது.

படங்களின் சூத்திரம், படங்களின் வகைகளுக்குள் பொதிந்திருக்கும் "கோலங்கள்" இவற்றைப்பயன்படுத்தும் தேடும் முறையைக் கொண்டுவந்திருக்கிறது.

இது வேறு பல இடங்களில் ஏற்கனவே சோதிக்கப்பட்டதாயினும் தேடுபொறியொன்றில் இதனைப்பொருத்தும் சிந்தனை புதியது.

முகங்கள் கொண்ட படங்களைப் பிரித்தறிதல் இதன் சுவையான பெறுபேறு.

படங்களின் "கோலங்களை" அதன் சமன்பாடுகளை ஆய்வு செய்யும் இப்புதிய ஆய்வுப்பாதை இன்னும் சுவையான, ஆக்கபூர்வமான பல பெறுபேறுகளை மனிதருக்குப் பெற்றுத்தரும்.

தனக்கான மட்டுப்பாடுகளுடன் இதன் சாத்தியங்கள் பரந்து விரிந்து கிடக்கிறது.

சிறுவயதில் அம்மம்மா வீட்டில் இருந்த ஒலிநாடா இயக்கி (tape player) ஒன்று இத்தனையாவது பாடல் வேண்டும் என்று விசையை அழுத்தினால் சரியாக அந்தப்பட்டின் தொடக்கத்தில் போய் நிற்பது கண்டு புல்லரித்து வியந்திருக்கிறேன். (அப்போது இறுவட்டுக்கள் வரத்தொடங்கிய காலம்) பின்னர், பாடல் முடிவில் ஒரு ஒலியற்ற இடைவெளி இருக்கும் எனும் எளிய கோலம் தான் இந்த வசதியின் சூத்திரம் என்று ஒலியற்ற இடைவெளிகள் சிலவற்றை பதிவு செய்து சோதித்துத் தெளிந்துகொண்டேன்.

படங்களைப் படிக்கும் முறையும் இவ்வாறானதே.

இனி படங்களில், அசைபடங்களில், ஒலிக்கோப்புக்களில் உள்ள கோலங்களை அறிந்து உணர்ந்து தேடித்தரும் வசதிகளை மனிதர் மனிதருக்கு வழங்கத்தொடங்குவர்.

இசை என்ற குறிச்சொல்லில் தேடி, தவில் இசை மட்டும் கொண்ட ஒலிக்கோப்புக்கள் வரும்படியாக தேடலை வடிகட்டிக்கொள்ளும் வசதி உபயோகமானதுதானே?

உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸ் திருப்பூர் ஐடி அசோசொயேஷன் சார்பில் நேற்றைய தினம் வெளியடப்பட்டது. நேற்றைய தினம் (22-11-08) அதன் உறுப்பினர்களுக்கு உபுண்டு இயங்குதளத்தின் அடிப்படைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

உபுண்டுவில் எவ்வாறு ஒரு பயனர் தமிழ் வசதிகள் துவங்கி பல்லூடக வசதிகள், பொதிகள் நிறுவுவது, விண்டோஸ் இயங்கு தளத்தில் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் பயன்பாடுகளுக்கு மாற்றாக கிடைக்கும் மென்பொருள்கள் போன்றவை விரிவாக விளக்கப்பட்டன. டேலி போட்டோஷாப் போன்ற பயன்பாடுகளை உபுண்டுவில் வைன் மூரம் இயங்குவதை பார்த்து கலந்து கொண்டோர் ஆச்சரியம் கொண்டனர்.

கணினிகளை உபுண்டு கொண்டு அசோசியேஷன் உறுப்பினர்கள் விற்பனை செய்தால் அங்ஙனம் வாங்குவோருக்கு அசோசியேஷன் சார்பில் மாதத்தில் ஒரு நாள் தொழில் சார்ந்த பயிற்சி கொடுக்கலாம் என்ற யோசனை உபுண்டு தமிழ் குழுமம் சார்பில் முன்வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தித் தந்த திருப்பூர் ஐடி அசோசியேஷனுக்கு மனமார்ந்த நன்றிகள். அசோசியேஷனின் தலைவர் இரவிச்சந்திரன், பாபு, செந்தில், தியாகு உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நிகழ்ச்சியினை இராமதாசும், சிவாவும் (கம்பன் பொறியியல் கல்லூரி மாணவர்) இணைந்து நடத்தினர். கட்டற்ற மடல் வழங்கி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கும் நமது பணிகள் விரிய வேண்டும் போன்ற பாடங்களும் இந்நிகழ்வில் கிடைக்கப்பெற்றது.

இன்டிரிபிட் ஐபக்ஸ் வெளியீடு - உதகை உதகை - நவம்பர் 28. கம்ப்யூட்டர் வோர்ல்டு, உதகை சார்பில் உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸ் உதகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாணவர்கள், கணினி விற்பனையாளர்கள், கனேடியர் என பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கலந்து கொண்டோருக்கு உபுண்டு நிறுவும் முறை, உபுண்டுவில் பொதிகள் பராமரிப்பு, வைன் பயன்படுத்தி விண்டோஸ் மென்பொருள் நிறுவும் முறை, இணைய வசதிகள் போன்ற விடயங்கள் செய்முறையாக விளக்கப்பட்டன.

நிகழ்ச்சியினை உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் இராமதாசும் பத்மநாதனும் நடத்திக் கொடுத்தனர். அனைவருக்கும் உபுண்டு வட்டுக்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்திக் கொடுத்த கம்ப்யூட்டர் வோர்ல்டு டெர்ரன்ஸ் எஸ் இராஜேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

கேரள மாநிலம் கொச்சின் - அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவிலான கட்டற்ற மென்பொருள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். சித்தார்த், பவன், அருண், பரணி,  ராஜசேகர், பாலாஜி என கிட்டத்தட்ட பதினைந்து பேர் தமிழகத்திலிருந்து கலந்து கொண்டோம். நிகழ்ச்சிக்கு ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயர் தொலைவிலிருந்து திரையில் தோன்றி வாழ்த்துரை வழங்கினார். கேரள கல்வியமைச்சர் திரு பேபி மாநாட்டை துவக்கி வைக்க, பல்கலைக்கழக துணைவேந்தர் கங்கன் பிரதாப் தலைமை வகித்தார்.

லோகலைசேஷன் - இன்டர்நேஷலைசேஷன் எனும் தலைப்பில் தில்லி கோரா மொகந்தி, சுகந்திர மலையாளக் கணிமை ஷ்யாம் ஆகியோருடன் இணைந்து ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டற்ற கணிமைச் சூழலில் இந்திய மொழிகளுக்காக இதுவரை  நடைபெற்ற பணிகள் மற்றும் இனி நடைபெறவேண்டியிருக்கும் பணிகள் போன்ற விடயங்களை அலசினோம். இன்டுலினக்ஸ் திட்டத்தின் முறையான அடுத்த சந்திப்பு வரும் 2009 ஜனவரி மாதத்தில் சடைபெறலாம். விவரங்கள் கிடைக்கப்பெற்றதும் பகிர்ந்து கொள்கிறோம்.

தொழில் முனைவோருக்கான ஒரு கூடுதலிலும் கலந்து கொண்டு கேரளத்தில் கட்டற்ற மென்பொருளை மட்டும் சார்ந்து வெற்றிகரமாக தொழில் நடத்தி வரும் அனூப் ஜான் உள்ளிட்டோரது அனுபவங்களையும் கேட்க முடிந்தது. மாலை உலக பொருளாதார சிக்கலும் ஐடி தொழிலும் எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கமும் நடைபெற்றது. நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திரு. சீத்தாராம் யெச்சூரி, கேப்ஜெமினி நிறுவன வழிகாட்டி பொறுப்பில் இருக்கும் ஆஞ்சன் பேனர்ஜி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

கேளரத்துக்கே உரிய மோகினியாட்டம், கதக்களி, பரதம் போன்ற கலை நிகழச்சிகளுக்கும் கண்களுக்கு விருந்தாய் அமைந்திருந்தன. மடலாடற் குழுவிலேயே பெரும்பாலும் அறிந்து வந்துள்ள பலரையும் நேரடியாக சந்திக்கும் ஒரு வாய்ப்பினை இந்நிகழச்சி அமைத்துத் தந்தது.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்த உழைத்த அத்துனை பேருக்கும் பாராட்டுக்கள். நல்லதொரு உபசரிப்பும் சுவையான கேரள உணவும்
விருந்தோம்பலும் பசுமையான சூழலும் நினைவில் நீடித்து நிற்கப் போகிறதென்றால் அது மிகையாகாது.

(உபுண்டு தமிழ் குழுமத்துக்கு கா. சேது எழுதிய மடல்)

நண்பர்களே,

உபுண்டு 8.04 (ஹார்டி) வந்த பின், தமிழ் எழுத்துருக்கள் தொடர்பாக 4
வழுக்கள் இருப்பதாகச் சென்ற வாரம் எழுதியிருந்தேன்.

//இன்ட்ரெபிடிலும் ஹார்டியிலும் தமிழ் பயன்பாட்டுகளுக்கு எழுத்துருகள்
தொடர்பாக ஒரே விதமாக 4 வகை வழுக்கள். விவரமான அறிக்கை எழுத
ஆரமபித்துள்ளேன். சற்று பொறுக்கவும். தெரிந்த தீர்வுகள் எல்லாம் தற்காலிக
நடவடிக்கைகளே. சரியான தீர்வுகள் நோக்கிச் செல்ல அடுத்த கட்ட
நடுவடிக்கைகளுக்கு நாம் செல்ல வேண்டும். அது வழு அறிக்கைகளை டெபியன் /
உபுண்டு மேம்பாட்டாளர்களிடம் முன்வைத்து முற்றாக எல்லாவற்றையும்
தீர்ப்பது. //

அது எனது அக்டோபர் 28
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-October/001633.html
மடலில் நான் எழுதியது. 3 மாதங்கள் முன் உபுண்டு இன்ட்ரெபிட் ஆல்பாவை
நிறுவி அதன் பின் அம்மடல் இட்ட தினம் வரையிலான எல்லா மேம்பபாடுகளையும்
இற்றைபடுத்தியிருந்த எனது வன்தட்டிலுள்ள இயங்குதளத்தில் நான்
கண்ணடிருந்தவைகள் அடிப்படையில் அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் அதன் பின் அதற்கு சில வாரங்கள் முன்னரே பதிவிறக்கி வைத்திருந்த
பீட்டா இறுவட்டை முதன் முறையாக நிகழ்வட்டாக இயக்கிப்பார்க்கையில்
முதலாவதும் முக்கியதுமான வழுவான மங்கல் பிரச்சினையில் ஒரு மாற்றம்
இருப்பதைக் கண்டேன். ஆரம்பத்தில் இயல்பாக வரும் லோகித் தமிழ் தரும்
ttf-indic-fonts-core உட்பட்ட நிறுவலில் முன்னர் உபுண்டு 8.04 வில் போல
இருப்பினும் தமிழ் மொழிப்பாவணைக்கு அவசியமான மேலதிகப் பொதிகளை
இடுகையில் ttf-tamil-fonts பொதி இற்றறைப்படுத்தப்பட்ட பின் மங்குதல்
இல்லாமலும் எழுத்துகள் சிதையாமலும் முன்னனேற்றப்பட்ட தோற்றத்துக்கு
மாறுகின்றன. பின்னர் வந்த இறுதி வெளியீட்டை புதிதாக வன்தட்டில் நிறுவி
இயக்குகையிலும் அம்மாற்றம் நிரந்தரமானது என்பது தெளிவானது.

ஆனால் sans/serif/monospace எழுத்துருக்கள் பயன்பாடுகளில் தமிழ்
எழுத்துருவங்கள் மங்கலாதல் மற்றும் சீரற்றல் இல்லாவிடினும் அவற்றின் உருவ
இயல்புகள் TSCu- Paranar போலத்தான் உள்ளது. முன்னர் Hinting=Slight என்ற
தீர்விற்குப்பின் லோகித் தமிழ் இயல்பான உருவங்களின் துல்லியம் (அல்லது
வடிவழகு) இந்த TSCu- Paranar இயல்பில் இல்லை என்பது என் கருத்து.
மேலும் இம்மடலில் நான் சுட்டிக்காட்டுகின்ற ஏனைய 3 வழுக்களில்
கடைசியானதற்கு TSCu எழுத்துருக்களே காரணி என்பதும் புலனாகியுள்ளது.

வழு 2 யைப்பற்றி சில (ஏப்பிரல் - மே) வழு 1 பற்றிய மடல்களில்
குறிப்பிட்டிருந்தேன. இத் திரைக்காட்சியைப் பாருங்கள்:
http://i34.tinypic.com/2w5t5dc.jpg . ஆங்கில மொழியிடச் சூழலில்
Appearance Preferences, Font Rendering Details தேர்வுகளுக்கான
பெட்டகங்களில் எழுத்துக்கள் தெரிவது போல்லல்லாமல் தமிழ்
மொழியிடச்சூழிலில் வெற்றுக்கட்டங்களாகத் தென்படுதல். இது லோகித் தமிழ்
எழுத்துருவின் மேதாதிக்கதினால் என்பதை கணித்துள்ளேன். லோகித் தமிழ்
எழுத்துருவை அகற்றினல் இவ்வழுவும் அகல்கிறது!

வழு 3 ஆனது http://ubuntuforums.org/showthread.php?t=889079 .
"படருதல்" பிரச்சினை. பயர்பாக்ஸ் 3 ஐ தமிழ் மொழியிடச்சூழிலில்
இயக்குகையில் சில வலைப்பக்கங்களில் சில இடங்களில் ஆங்கில
எழுத்துக்களுக்குப் பதிலாக தமிழ் எழுத்துக்கள் பின்னிப் பினைந்துத்
தெரிவது. காட்டாக http://i37.tinypic.com/httsg6.jpg திரைகாட்சியில்
இல் எனது வன்தட்டில் முன்னைய நிறுவலில் பீட்டா வரை மேம்படுத்திய போது,
""ibus" மடலாற்ற குழுமத்திற்கு நான் இட்ட மடலை தமிழ் மொழியிடச்சூழிலில்
FF3 இல் பார்க்கையில் அவ்வழு இருப்பதையும் ஆங்கில மொழியிடச்சூழிலில்
இல்லாதிருப்பதையும் காணலாம். (அதன் வலைத்தளப் பக்கம் :
http://groups.google.com/group/ibus-user/browse_thread/thread/1e1461e4b4cd244
). இப்போதும் இறுதி வெளியீட்டுல் பார்க்கையில் அப்பக்கத்திலும் மற்றும்
Google / Yahoo அல்லாத http://www.unicode.org/review/pr129.html
பக்கதத்திலும் இந்த "படரல்" வழு கண்டுள்ளேன். லோகித் தமிழ் எழுத்துருவை
அகற்றினல் இதுவும் அகல்கிறது

வழு 4 ஆனது TSCu எழுதுருக்களின் ஆதிக்கத்தினால் கூகிள் அஞ்சல் இடைமுகப்பு
மற்றும் பலகணியில் (task bar) இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செயல்
நிரல்களைக் காட்டும் கீற்றுகளிலும், ஆஸ்கியின் மேல் (128-255) அரங்கில்
உள்ள குறியீடுகள் (- அம்புக்குறிகள், elipses) அவற்றிற்கான குறியேற்ற
இடங்களில் பொருத்தப்பட்ட தஸ்கி எழுத்துருவங்களைக் காண்பித்தல். (இதன்
திரைக்காட்சியை அடுத்த மடலில் இடுவேன்) . எல்லா TSCu எழுத்துக்களயும்
அகற்றினல் இவ்வழு ஏற்படுவதில்லை.

மேற் காட்டிய எல்லா 4 வழுக்களையும் இல்லாதாக்க வேண்டுமாயின் லோகித்
தமிழ் மற்றும் எல்லா TSCu எழுத்துருக்களையும் அகற்றுவது ஒரு தீர்வு.
ஆயினும் அவ்வாறு அகற்றி சூரியன்டாட்காம் நிறுவியிருப்பினும்
sans/serif/monospace எழுத்துருக்கள் தமிழ் எழுத்துருவங்களுக்கு
உபுண்டு-கட்சியில் போல Free fonts இல் உள்ள வடிவழகைத்தான் காட்டுகின்றன.
அதாவது ஈகார உயிர்மெய்களில் விசிறி அகன்று தோன்றும். ஆக பயனர்
sans/serif/monospace எழுத்துருக்களுக்கை முன்னிருப்பாக பயன்படுத்தும்
ஒவ்வொரு செயல் நிரல்களிலும் மாற்றாக சூரியன்டாட்காம் அல்லது வேறு ஏதாவது
வழுக்களற்ற எழுத்துருக்களை அமைக்க வேண்டியிருக்கும்.

மேலும் லோகித் தமிழ் மற்றும் TSCu எழுத்துருக்கள் எல்லாம் கட்டற்ற
மென்பொருள்களாக அளிக்கப்படுவதால் அவற்றை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு
அவ்வளவு ஏற்கத்தக்கதல்ல. டெபியன் எட்ச், பெடோரா 9 மற்றும் மாண்டிரீவா
2009 ஆகியனவற்றில் இவற்றினால் ஏற்படாத பிரச்சினைகள் உபுண்டுவில்தான்
ஏற்பட்டு வருகிறது என்பதையும் கண்டுள்ளேன்.

எனவே வேண்டிய தீர்வு, லோகித் தமிழ் மற்றும் TSCu எழுத்துருக்களை
அகற்றாமல் sans/serif/monospace எழுத்துருக்கள் நாம் விரும்பும்
எழுத்துருவத்தில் உள்ள தமிழிற்கான எழுத்துருவங்களை அவைகளின் இயல்பாக
ஏற்றிக்கொள்ளுமாறு நாம் கட்டுப்படுத்த இயலுமை எனக் கருதுகிறேன். அது
சாத்தியம்தானா என்ற வினாவுடன் நேற்று /etc/fonts/ கீழ்ழுள்ள அடைவுகள்
மற்றும் கோப்புக்கள் பல ஆய்வு செய்து சோதனைகள் சில செய்து இயலும்
என்பதைக் கண்டறிந்தேன்.

இந்த திரைக்காட்சியைப் பாருங்கள்: http://i34.tinypic.com/25a6szo.jpg

லோகித் தமிழ் மற்றும் TSCu எழுத்துருக்களை அகற்றாமல்
sans/serif/monospace எழுத்துருக்களுக்கு சூரியன்டாட்காமை
விருப்பத்தேர்வாக்கத் (preferred) தேவையான தொடர்பை (sym link) ஆக்கி
மேலும் Hinting=Slight என்பதையும் பாவித்து அமைத்தபின் எனக்கு
பிடித்தவிதத்தில் வடிவழகுடன் இப்போது எனது உபுண்டு 8.10 உள்ளது.
மேற்காட்டிய திரைக்காட்சியில் போல.

ஆயினும் அது நான் தற்போது பயன்படுத்தும் LCD 19" திரையுடன். மேலும்
கேடீஈ மற்றும் சுபுண்டுகளில் இதுவரை சோதிக்கவில்லை. எனவே தாங்கள் யாவரும்
வெவ்வேறு பணிச்சூழல்களிலும் திரைகளிலிலும் சோதனைகளை செய்து பார்க்கத்
தேவையான படிகளை இன்றோ நாளையோ அடுத்த மடலில் ஆங்கிலத்தில் எழுதுவேன்.
போதிய நேரம் கிடைப்பின் தமிழிலும் எழுதி pdf ஆக்கி இணைப்பேன் (தமிழில்
மடல் இருப்பின் சோதனைகளின் போது வாசிக்கவியலா நிலை ஏற்படக்கூடும்
என்பதால்தான் pdf எண்ணம்).

வலைப்பதிவிற்கு பின்னர் கொணரலாம். நான் செய்யாவிடில் நண்பர்
மயூரன்அதைச்செய்து உதவி விடுவார் :>)

~சேது

[இது தமிழ் உபுண்டு மடற்குழுவுக்கு சேது அனுப்பிய மடல். ஒவ்வொரு தொழிநுட்ப விஷயத்தையும் அதன் ஆழம்வரை சென்று ஆராய்ந்து எழுதும் சேதுவை அவருக்கென ஒரு வலைப்பதிவைத்தொடங்கும்படி கேட்டுக்கேட்டு அலுத்துப்போய்விட்டது ;-). அவரது நேர நெருக்கடி புரிந்துகொள்ளத்தக்கதே. அவர் வலைப்பதிவு ஆரம்பிக்கும்வரை மடற்குழுக்களில் மறைந்துகிடக்கும் அவரது முக்கியமான எழுத்துக்களை இக்குறிப்பேட்டில் தர எண்ணம். அவர் வலைப்பதிவு தொடங்கும்போது இவற்றை இலகுவாக எடுத்து அங்கே போட்டுக்கொள்ளலாம்]

(Intrepid Ibex என்பதே உபுண்டுவின் 8.10 பதிப்பின் பெயர்)

நான் பல வாரங்கள் முன் அல்பா-3 நிறுவலில் இல் தொடங்கி அதன் பின் வந்த எல்லா
மேம்பாடுகளையும் சேர்த்து தற்போது பீட்டா (இன்று வரையான) மேம்பாடுகளுடன் சோதித்து
வருகிறேன்.

முதலில் எழுத்துப்பெயர்த்தல் பற்றி:

Intrepid = இன்ரெபிட் அல்லது இன்ட்ரெபிட் அல்லது இந்தெரபிட் எழுத்துப்பெயர்ப்புகளில்
ஒன்றாக இருக்கலாம் என நினைக்கிறேன். trepid போன்ற வார்த்தைகளில் "tre" ஈற்றில் உள்ள
உயிர் ஒலி இகரமாக பலுக்கப்படுவதில்லை மாறாக கூடுதலாக அதில் எகரம் அண்மித்தே
இருப்பதாகக் கருதுகிறேன். ர வுக்குப்பதில் ற வாக இருக்க வேண்டுமா என்பது என் மனதில்
உள்ள இன்னொரு வினா.

Ibex = ஐபெக்ஸ் என்றிருக்கலாம்.

ஈற்றில் மெய் வரா என்ற விதியை கடைபிடிப்பதாயின் "பிட்" => "பிட்டு" , "க்ஸ்" => "க்சு"
என மாற்ற வேண்டும்.

எனினும் எழுத்துபெயர்ப்பு / தமிழாக்கம் சரியாக இருக்கவேண்டும் என்பது அவ்வளவு
முக்கியமல்ல . வெளியீட்டை உபுண்டு - 8.10 - பீட்டா என்றே கூடுதலாக அழைத்துக்கொள்ளலாம்
தானே?

பார்க்க : http://www.ubuntu.com/ மற்றும் http://www.ubuntu.com/testing/intrepid/beta பக்கங்களில் Ubuntu 8. 10
என்றுதான் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அடுத்து உபுண்டு, குபுண்டு மற்றும் சுபுண்டு 8.10 அல்பா வெளியீட்டுக்களில் இருந்த ஒரு
பாரதூரமான வழு, மற்றும் பீட்டா வெளியீட்டில் உள்ள அதற்கான தற்காலிக வழு தவிர்க்கும்
பாதுகாப்பு நடவடிக்கை, தற்போதைய நிலவரங்கள் பற்றி தாங்கள் யாவரும் அறிந்திருத்தல் நன்று.

http://www.ubuntu.com/testing/intrepid/beta#Known%20Issues என்ற பக்கத்தைப்
பார்க்கவும். அதில் முதலாவதாகச் சுட்டிக்காட்டப்படும் பிரச்சினைதனான் அவ்வழுவினால் ஏற்பட்டது :

A problem that could result in corruption of the firmware on Intel
GigE ethernet hardware has led to the disabling of the e1000e driver
in the Linux kernel included in Ubuntu 8.10 Beta. Ethernet devices
that use this driver cannot be used with Ubuntu 8.10 Beta; support for
this hardware will be re-enabled in daily builds immediately after
Beta and this issue will be resolved for the Ubuntu 8.10 final
release. https://bugs.launchpad.net/bugs/263555

மேற்கூறிய அவ்வழு (26355) அறிக்கை பக்கம் சென்று பாருங்கள். e1000e இயக்கி பாவிக்கும்
இன்டெலின் Ethernet வன்பொருட்கள் சில கணினிகளில் (முக்கியமாக மடிக்கணினிகளில்)
பாவிக்கவியலா அளவிற்கு 8.10 அல்பாக்களில் இருந்த அவ்வழுவினால் பாதிக்கப்பட்டிருதமை
பற்றிய தகவற்கள் அங்கு காணலாம். மற்றும் இவ் வழுப் பிரச்சினைக் காரணமாக உபுண்டு
வெளியீட்டாளர்களுக்கு எதிராகவும் சார்பாகவும் பல காரசார விவாதங்கள் அங்கு காணலாம்.

சுருக்காமாக பட்டியலிடுவதாயின்:

1)

2008 ஆகஸ்ட் முதல் செப்டெம்பர் 24 முன் வெளியிடப்பட்டு வந்த (லினக்ஸ் kernel
2.6.27-4.6 க்கு முன்னர் வந்த) 2.6.27 வரிசை kernal rc வெளியீடுகள் சில இன்டெல்
பிணைய வன்பொருட் பாகங்கள் (network parts) பாவிக்கும் NVRAM ஐ மாசுபடுத்தக்கூடிய
வழுவை கொண்டிருந்தன. அப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவை e1000e இயக்கி (driver)
பயன்படுத்தும் ich8 மற்றும் ich9 பாலவமைப்பினாலான இன்டெல் வன்பொருள் பாகங்கள் உள்ள
கணினிகள். முக்கியமாக பல சமீபகால மடிக்கணினிகள். பாதிப்பின் பாரதூர தாக்கம் என்னவெனின் சிலரின் கணினிகளில், பிணையம் தொடர்பான வன்பொருட்கள் எந்த இயங்குத்தளத்திலும் முற்றாகப் பாவிக்கியலா வண்ணம் பழுதானதாகும்!

2)

செப்டெம்பர் 24 இல் வெளிவந்த 8.10 அல்பா (kernel 2.6.27-4.6) முதல் பின்னர்
ஒக்டோபர் 2 வாக்கில் வெளிவந்த பீட்டா மற்றும் அதன் பின்னர் சில நாட்கள் வரை வெளிவந்த
தினசரி ஆக்கங்கள் (Daily Builds) ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட வன்பொருட்களின்
பாதுகாப்புக்காக இன்டெல் e1000e இயக்கி பயன்படுத்தும் கணினிகளில் பிணைய அமைப்பை
செயலிழக்கச் செய்யும் தற்காலிக நடவடிக்கை உள்ளடக்கினர். அதானது அவ்வெளியீடுகளில் ஒன்றை
நிறுவப்படும் கணினியில் இன்டெல் e1000e இயக்கி பாவிக்கும் வன்பொருள் இருப்பின் அது
பழுதைடையா வண்ணம் அவ்வியங்குத்தளத்தில் மட்டும் பிணைய / இணைய தொடர்புகள் இயங்காமல்
இருக்கும் நடவடிக்கை. அதே e1000e இருக்கும் கணினிகளில் பழைய வழுவற்ற kernel உள்ள
வேறு லினக்ஸ் மற்றும் விண்டோ இயங்குதளங்களில் பிணைய / இணைய தொடர்புகள் பிரச்சினைகள் இல்லாமல் இயங்கும. அதாவது வன்பொருள் பழுதாகும் சாத்தியக்கூறுகளை முற்றாக அகற்றவே அந் நடவடிக்கை.

3)

பின்னர் ஒக் 7 வெளியிடப்பட்ட 20081007 தினசரி ஆக்கத்திலிருந்து வழு முழுவதும்
களையப்பட்ட kernel தான் உள்ளடக்கப்படுவதாக வழு அறிக்கை பக்கத்தில் ஒரு மடலில்
https://bugs.launchpad.net/ubuntu/+source/linux/+bug/263555/comments/166
கூறப்பட்டுள்ளது. ஆயினும் அதன் பின்னரரும் தங்கள் e1000e இயக்கி உள்ள கணினிகளில் வழு
அகற்றப்பட்ட நிறுவலில் இருந்து வலைத்தொடர்புகளை ஏற்படுத்த இயலாதுள்ளதாக மூவர்
அப்பக்கத்தில் அறிவித்துள்ளனர். (அவற்றிற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என நினைக்கிறேன்).

4)

தற்போது உபுண்டு 8.10 - பீட்டா
(http://www.ubuntu.com/testing/intrepid/beta) அல்லது குபுண்டு 8.10 - பீட்டா
(https://wiki.kubuntu.org/IntrepidIbex/Beta/Kubuntu) பதிவிறிக்கி நிறுவி
சோதிதித்துப்பார்க்க விரும்பின் முதலில் தங்கள் கணினியில் உள்ள பிணைய அமைப்புக்கான இயக்கி
(ethernet driver) என்னவென கண்டறியுங்கள்.

அத்துடன் சுபுண்டு 8.10 - பீட்டா (http://cdimage.ubuntu.com/xubuntu/releases/8.10/beta/)
விற்கும் அவ்வாறே.

எந்த இயக்கி பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய முதலில் பயன்படுத்தப்படும்
இடைமுகப்புக்களின் வன்பொருள் முகவரிக்களை ("HWaddr" of Network interfaces)
கண்டறிய பின்வரும் கட்டளையை ஒரு முனையத்தில் கொடுக்கவும்.

ifconfig |grep HWaddr

காட்டாக எனது intel-D945GNT motherboard உள்ள கணினியில் உள்ள ஒரே இடைமுகப்பிற்கு
வரும் மறுமொழி பின்வருமாறு:

eth0 Link encap:Ethernet HWaddr 00:19:d1:13:26:ba

ஒன்றுக்கு மேற்பட்ட இடைமுகப்புக்கள் இருப்பின் (மேலதிக PCI அட்டைகளாக ) அவற்றிற்கான
HWaddr களும் மேற்காட்டியது போல eth1, eth2, ... என்ற வரிகளில் வரும். (eth0,
eth1,.. என்பன logical names எனப்படும்)

அடுத்து முனையத்தில் பின்வரும் கட்டளை கொடுங்கள் :

sudo lshw -C net

தங்கள் பயனர்க்கணக்கிற்கான கடவுச்சொல் கேட்பின் கொடுத்தபின் வரும் மறுமொழி வரிகளில் ஒவ்வோர்
இடைமுகப்புக்கான விவரங்கள் இருக்கும். மேலே நாம் கண்ட "HWaddr" என்பது இங்கு "serial"
என இருக்கும். அதற்கான விவரங்களில் "product:" என்பதற்கு தெரிவிக்கப்படுவது எந்த
இயக்கி பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி.

காட்டாக எனது கணினியில் இக்கட்டளை இடுகையில் வரும் முழுப்பதில் பின்வருமாறு:

sethu@IntrepidAlpha-sethu-desktop:~$ sudo lshw -C net
[sudo] password for sethu:
*-network
description: Ethernet interface
product: 82801G (ICH7 Family) LAN Controller
vendor: Intel Corporation
physical id: 8
bus info: pci@0000:04:08.0
logical name: eth0
version: 01
serial: 00:19:d1:13:26:ba
size: 100MB/s
capacity: 100MB/s
width: 32 bits
clock: 33MHz
capabilities: pm bus_master cap_list ethernet physical tp mii
10bt 10bt-fd 100bt 100bt-fd autonegotiation
configuration: autonegotiation=on broadcast=yes driver=e100
driverversion=3.5.23-k4-NAPI duplex=full firmware=N/A ip=192.168.0.2
latency=32 link=yes maxlatency=56 mingnt=8 module=e100 multicast=yes
port=MII speed=100MB/s
*-network DISABLED
description: Ethernet interface
physical id: 1
logical name: pan0
serial: d2:2b:82:44:f1:a0
capabilities: ethernet physical
configuration: broadcast=yes driver=bridge driverversion=2.3
firmware=N/A link=yes multicast=yes

மேற்காட்டியதில் எனது கணினியின் பிணையதிற்கான ஒரே வன்பொருள் இடைமுகப்பு eth0
பாவிக்கும் இயக்கி "82801G (ICH7 Family) LAN Controller" என அறிகிறோம். (அது
இந்த வழுவினால் பாதிப்படையாதது)

தங்கள் கணினியில் எந்தவொரு பிணைய வன்பொருள் இடைமுகப்புக்கும் ICH8 அல்லது ICH9 குடும்ப
e1000e இயக்கி பயன்படுத்தப்படுவதாயின் பீட்டா வெளியீட்டை பதிவிறக்கி நிறுவாமல் பின்வரும்
மாற்று நடவடிக்கைளில் ஒன்றைச் செய்யுங்கள் எனப் பரிந்துரைக்கிறேன்:

i)

காத்திருந்து இம்மாதக் கடைசியில் வரவுள்ள இறுதி வெளியீட்டை நிறுவுவது .

ii)

அல்லது இறுதி வெளியீடு வரும் முன் இடைக்காலத்தில் வரவுள்ள Release Candidate
(RC) இறுவட்டை வெளிவந்தபின் பதிவிறக்கி நிறுவுவது.

iii)

RC வரும் வரை முன் இப்போதே வேண்டுமெனின் கடைசியாக வந்த தினசரி ஆக்க இறுவட்டை
பதிவிறக்கி நிறுவுவது. உபுண்டு, குபுண்டு, சுபுண்டு ஆகியனவற்றிற்கான தினசரி ஆக்க
நிகழ்வட்டு அடங்கிய இறுவட்டுக்கள் உள்ள இடங்கள் பின்வருமாறு :

http://cdimage.ubuntu.com/daily-live/
http://cdimage.ubuntu.com/kubuntu/daily-live/
http://cdimage.ubuntu.com/xubuntu/daily-live/

5.

இவ்வழுவின் மூல காரணி முதலில் வந்த 2.6.27-rc kernel மேம்பாடுகள். ( வழு
அறிக்கைப பக்கம் : http://bugzilla.kernel.org/show_bug.cgi?id=11382 ) .
பெடோரா, மாண்டிரீவா, ஜெனட்டூ லினக்ஸ், சூசே மேம்பாட்டாளர்களும் இவ்வழுவை தவிர்ப்பதற்கான
நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனத்தெரிகிறது. உபுண்டு மேம்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமை
விமர்சனங்கள் எழக் காரணம் வன்பொருள் பாதிக்கக்கூடிய வழுவுள்ளது என அறிந்தபின்னும் அடுத்து
வெளியிடப்பட்ட அல்பா வரும் வரையிலான இடைக்காலத்தில் வழுவுடன் வெளியிடப்பட்டிருந்த
அல்பாவை உடனடியாக மீள்வாங்காமல் விட்டது எனத்தெரிகிறது.

தற்போது கூட http://www.kubuntu.org/ க்கு செல்லும் ஒரு புதுப்பயனர் குபுண்டு பீட்டா
பற்றிய விளம்பரப்படுத்தும் தொடுப்பை சொடுக்கி
http://www.kubuntu.org/news/8.10-beta வழியாக
https://wiki.kubuntu.org/IntrepidIbex/Beta/Kubuntu என்ற அறிவிப்பு பக்கம்
சென்று இறுவட்டை பதிவிறக்குகையில் எங்கும் இவ்வழு பற்றியோ ஏனைய இருக்கும் பிரச்சினைகள்
பற்றியோ அறியாமலே இருக்கலாம். உபுண்டுவிற்கான அறிவிப்பு பக்கத்தில் (
http://www.ubuntu.com/testing/intrepid/beta ) "Known Issues" பக்கதிற்கு
தொடுப்பு உண்டு. சுபுண்டு பீட்டா அறிவிக்கும்
http://www.xubuntu.org/news/intrepid/beta பக்கதிலிருந்து "Release Notes"
என்ற தொடுப்பு கொடுக்கும்
https://wiki.ubuntu.com/Xubuntu/IntrepidIbex/BetaAnnouncement பக்கத்தில்
இவ்வழு இருந்திருப்பதைப்பற்றி தெளிவாக தகவல் உள்ளது. இவ்வாறு வெவ்வேறு உபுண்டவின்
விநியோங்களிக்கிடையே ஒருமித்த விதமாகவில்லாமல் இருப்பதும் ஒரு குறைபாடுதான்.

எந்த பயனரும் அல்பா, பீட்டா போன்ற சோதனை வெளியீடுகளை பதிவிறக்கி சோதிக்க விரும்பின்,
ஏற்கனவே இருக்கும் வழுக்கள் மற்றையப் பிரச்சினைகள் பற்றி முற்றாக அறிந்த பின்னரே
முற்படவேண்டும். முக்கியமாக மேம்பாட்டாளர்களுக்கான மடலாற்ற குழும மடல்களை வாசிக்கவும்
வேண்டும். சோதனை வெளியீடுகளைப் பாவிக்கையில் மென்பொருட்கள் பழுது, தரவுக்கோப்புக்கள்
இழப்பு மற்றும் வன்பொருள் பழுது ஏற்படுவது அரிதாக இருப்பினும் அவை ஏற்பட ஒரு
சாத்தியக்கூறும் இல்லை என யாரும் உத்தரவாதம் அளிப்பதில்லை என்பதையும் நோக்கவும். எனவே
சோதனைகளில் ஈடுபட முன் இவற்றை கருத்தில் எடுத்து முடிவு செய்யுங்கள்.

XML feed