லினக்ஸ் - உபுண்டுவில் வீடியோவை பிடிக்க ஒரு சுலபமான வழியை இணையத்தில் காண நேர்ந்தது,அது கீழ் வருமாறு.
இப்ப நீங்க யூடூபில் ஒரு படம் பார்க்கிற்ரிங்க அதை சேமித்து பிறகு பார்க்கவோ அல்லது யாரிடமோ காண்பிக்கவோ சேமிக்க வேண்டும்,எப்படி செய்வது?
கீழே உள்ள படத்தை பார்க்கவும்,
நான் விஜய் பாட்டை பார்க்கிறேன்... முழு பாட்டையும் உங்கள் பக்கம் கேட்ச் செய்தவுடன்,உங்கள் tmp folder ஐ திறந்து பாருங்கள் அங்கு உட்கார்ந்திருக்கும் நீங்கள் பார்த்தவீடியோ ஏதோ ஒரு பெயருடன்.அதை அப்படியே காப்பி/பேஸ்ட் முறையில் எங்கு வேணுமா அங்கு போட்டுவிட்டு அதை மறக்காமல் .flv என்று பெயர் மாற்றம் செய்துவிடுங்கள்.
அவ்வளவு தான்.
நீண்டகாலத்துக்கு முன்பே வெளிவந்ததொன்றாக இருந்தபோதும் நானறிந்தவரை தற்போதும் ஓரளவு வேலை செய்யக்கூடிய நிலையிலிருக்கும் ஒரேயொரு ஒளிசார் எழுத்துணரி (OCR) பொன்விழி தான்.
தமிழ் விக்கிபீடியாவில் தமிழ்க் கணிமையின் வரலாற்றினைப் பதிவு செய்யுமுகமாகக் காலக்கோடொன்றினை உருவாக்கும் பணிகளுக்காக இணையத்தில் தகவல்தேடிக்கொண்டிருந்தபோது. இந்தப்பொன்விழியை மறுபடி ஒருமுறை தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது.
பொன்விழி ஆரம்பத்தில் நிறையப்பணத்துக்கு விற்கப்படதாக அறிகிறோம். பின்னர் சிடாக் மென்பொருள் தொகுப்பு இறுவட்டில் இது இலவசமாக வழங்கப்பட்டது.
தற்போதும் இது மூடிய மூல மென்பொருளே. இதன் உரிம ஒப்பந்தம் குறித்து நான் பயன்படுத்தும் பதிப்பில் எந்தத்தகவலும் இல்லை.
ஆனால் எரிச்சல் என்னவென்றால் இம்மென்பொருள் வின்டோசுக்கு மட்டுமே.
சரி வந்தால் வா போனால் போ என்று வைன் (WINE) பயன்படுத்தி இதனை எனது க்னூ/லினக்சில் நிறுவிப்பார்க்கலாம் என்று முயன்றபோது, எந்தப்பிரச்சினையும் இல்லாமல் அழகாக நிறுவிப் பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.
ஆனால் சற்றே வேகம் குறைவு போல் தோன்றுகிறது. வின்டோசில் இதனை நான் பயன்படுத்திப்பார்த்ததில்லை என்பதால் வேகத்தை ஒப்பிட முடியவில்லை.
வைன் கொண்டு பொன்விழியை நிறுவியபின் அதனோடு விளையாடிய அனுபவம் சுவையானது..
1.
xsane மென்பொருளைப்பயன்படுத்தி என்னிடமிருந்த புத்தகங்கள் இரண்டின் பக்கங்களை scan செய்துகொண்டேன்.
கவனிக்க : greyscale, 300 dpi
2.
Gimp மென்பொருளைப்பயன்படுத்தி அதனை 1 பிட் கறுப்பு வெள்ளைப்படமாக மாற்றி bmp வடிவில் சேமித்துக்கொண்டேன்.
3.
பொன்விழியை இயக்கி, அதன் பட்டியல் பட்டையில் ocr என்பதன்கீழ் recognize என்பதை தெரிவு செய்தேன்.
படத்திலுள்ள எழுத்தின் வடிவம் நேரானதா சரிந்ததா என்று கேட்டது. சரிந்தது என்று சொன்னேன். (அநேகமாக புத்தகங்கள் சரிந்த எழுத்தையே கொண்டிருக்கின்றன)
4.
புதிதாகத் திறந்த சாளரத்தில் என்னுடைய bmp படத்தினை திறந்து recognize என்பதைச்சொடுக்கியதும் நினைத்ததை விட வேகமாக படத்தின் எழுத்துக்களை பிரித்துணர்ந்து கொண்டது.
பிரித்துணரப்பட்ட உரைப்பகுதியை rtf வடிவில் சேமித்துக்கொண்டேன்.
சேமித்த கோப்பினை பின்னர் abiword இல் திறந்து TAM_Maduram எழுத்துருவுக்கு மாற்றினேன். உரைப்பகுதி அழகாகத்தெரிந்தது. ஆனால் ^ குறியீடுகள் குழப்பம் விளைவித்தன.
find&replace கட்டளையைப்பயன்படுத்தி அந்தக்குறியீடுகளை ஒரேசொடுக்கலில் நீக்கிக்கொண்டேன்.
உரைப்பகுதியை நகலெடுத்து சுரதாவின் பொங்குதமிழ் செயலியைப்பயன்படுத்தி ஒருங்குறிக்கு மாற்றிக்கொண்டேன்.
----
மேலே படங்களில் காட்டப்பட்ட உரைப்பகுதியை விடத் துல்லியமாக எழுத்துணரப்பட்ட கவிதைப்புத்தகம் ஒன்றின் பக்கத்தைக்காட்டும் படங்கள் இதோ.
எழுத்துணர்ந்து ஒருங்குறிக்கு மாற்றியபின் கிடைத்த வெளியீடுகள் இவை. மூலப் படங்களும் தந்திருக்கிறேன். ஒப்பிட்டுப்பாருங்கள். (எந்தவிதமான திருத்தங்களோ மாற்றங்களோ செய்யப்படவில்லை)
இறந்து போன மனைவியுடன் கணவணையும் சேர்த்து எரிக்கும்
கிட்டம் இரு வழிகளில் ஆபத்தானது, ஒன்று அவன் ஆண் என்ற
காரணத்தாலேயே அவ்வாறு செய்ய முடியாது. இரண்டாவதாக,
அவ்வாறு செய்தால் சாதி, வலுவான ஒரு உயிரை இழக்க தேரும்.
இவற்றை வீட்ட'£ல்', அவனுக்கு முடிவு கட்டும் இரண்டு இணக்க
மான வழிகள் உள்ளன. நான் இணக்கமான வழிகள் என்வ்'
குறிப்பிடுவதற்குக் காரணம். குழுவிற்கு அந்த ஆண் ஒரு பெரும்
சொத்தாக இகுப்பது தான்.
எதிரி முறுவலுடன்வந்தான்
மக்கள்முறுவலுடன்வரவேற்றனர்
மண்அங்குலம்அங்குலமாகப் பறிபோனது
எதிரிபுகழுரைகளுடன்வந்தான்
மக்கள்மகிழ்வுடன்வரவேற்றனர்
மண்ஏக்கர்ஏக்கராகப் பறிபோனது
எதிரி பரிசுகளோடு வந்தான்
மக்கள்நன்றியுடன்வரவேற்றனர்
மண்சதுரமைல்களாகப் பறிபோனது
மக்கள்விழிப்புற்றபோதுஎதிரி
முனறப்புடன்கையில்ஆயுதங்களுடன்
கவசவாகனமேறி வந்தான்
மக்கள்ஆயுதத்தரித்த போது
மண்ணைஅபகரித்தவனால்
மண்ணைஆளஇயலவில்லை
எதிரி போர்நிறுத்தம் பற்றிப் பேசினான்
அமைதி பற்றியும்
ஆயுதக்களைவு பற்றியும் பேசினான்
மக்கள்போரைநிறுத்திஅமைதி பற்றிப்பேச
ஆயுதங்களைக்களைந்த பின்
மண்மீண்டும் '
அங்குலம்அங்குலமாக
ஏக்கர்ஏக்கராகச்
ணுரமைல்களாப் பறிபோனது
ஷி-யின்இனிய சொற்கள்
வலியஆயுதங்கலிலுங் கொடியன
----
எழுத்துணரும் துல்லியத்தைக்கூட்டுவதற்கான வழிமுறைகள் பல உண்டு.
நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துரு துல்லியத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாகப்படுகிறது.
----
பொன்விழி தொடர்பான மேலதிக தகவல்களைப்பெறப் பின்வரும் தொடுப்புக்களைப் பார்வையிடுங்கள்.
http://thoughtsintamil.blogspot.com/2005/04/blog-post_111389400657312187...
http://www.bhashaindia.com/Patrons/Review/TaSWTamilOCR.aspx?lang=ta
http://www.tamiloviam.com/html/Nettan31.Asp
http://www.tamilvu.org/tsdf/html/cwswoap1.htm
http://www.ildc.in/GIST/htm/ocr_spell.htm
மாயா தனது பதிவில் "இலவச மென்பொருட்கள்" என்ற சொல்லினைப் பயன்படுத்தியிருந்தார்.
அத்தோடு அங்கே தரப்பட்ட தொடுப்புக்களும் சொல்லவந்த கருத்தும் க்னூ/லினக்ஸ் சார்ந்ததாக அமைந்திருந்தது கவனத்தைக் கவர்ந்தது.
இந்தச் சொற்பயன்பாட்டின் குழப்பம், அதன் பாரதூர விளைவுகள் மிகப்பரவலானது. மாயா க்னூ/லினக்ஸ் தொடர்பான தனது நல்லபிப்பிராயத்தை வெளிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமே. சொற் பயன்பாட்டில் ஏற்பட்ட குழப்பம் முழுமையாக அவருடைய தவறல்ல. சரியான விளக்கங்களை கொடுக்க வேண்டியது நமது கடமை.
ஆங்கில மொழிப்பயன்பாட்டில் ஏற்பட்ட இந்த குழறுபடி தேவையில்லாமல் வீண் குழப்பங்களை நிறைய உருவாக்கிவிட்டது. நேரடியாகத் தமிழிலேயே நாம் இச்சொற்களை பயன்படுத்த முனைவோமானால் குழப்பங்கள் வராது.
மாயா கேட்டுக்கொண்டதற்கிணங்க இச்சொற்பயன்பாடு குறித்து சில விளக்கங்களைத் தருகிறேன்.
க்னூ/லினக்ஸ் பற்றிய உரையாடலின்போது பின்வரும் சொற்களை நாம் அவதானமாகக் கையாளவேண்டியிருக்கிறது. ஏனெனில் சிறு தவறும் பெரிய தத்துவ, கோட்பாட்டு குழப்பங்களை உண்டாக்கிவிடக்கூடியவை.
இலவச மென்பொருள் :
இந்தச்சொல் தன்னளவில் விளக்குவதைப்போன்றே இந்த வகை மென்பொருட்கள் விலை கொடுத்து வாங்கத் தேவையில்லாதன. எடுத்துக்காட்டாக ரியல் ப்ளேயரை நீங்கள் இணையத்தில் இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம். Winamp இலவசமாகக் கிடைக்கிறது. இவை எல்லாம் இலவச மென்பொருட்கள்.
மைக்ரோசொஃப்ட் நிறுவனம் கூட ஏராளமான இலவச மென்பொருட்களை வழங்குகிறது.

இலவச மென்பொருட்கள் எத்தகைய உரிம ஒப்பந்தத்தோடும் வெளிவரலாம் (Lisence Agreement). அவை உங்களை உளவு பார்க்கலாம். வின்டோசில் மட்டுமே கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கலாம். உங்கள் வலைத்தளத்தில் ஏற்றி வைத்து மற்றவர்களோடு பகிரக்கூடாது என்று கட்டுப்படுத்தலாம். பெரும்பாலும் இவை இப்படித்தான் வெளிவருகின்றன.
அனுபவத்தில் இலவச மென்பொருட்கள் ஆபத்தானவையாகவே இருக்கின்றன. எந்தவொரு இலவச மென்பொருளும் (கட்டற்ற இலவச மென்பொருள் அல்லாதவை) ஏதோ ஒரு விதத்தில் உங்கள் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்துபவையாக உளவறிபவையாகவே இருக்கின்றன.
நச்சுநிரல்கள் (viruses) அனைத்துமே இலவச மென்பொருட்கள்.
இவற்றை ஆங்கிலத்தில் "Free ware" என்போம்.
தனியுரிமை மென்பொருள்
இவை ஒரு தனி நபருக்கோ நிறுவனத்திற்கோ தனியுரிமையானவை. இம்மென்பொருள் தொடர்பான எல்லா உரிமையும் அவர்களுக்கே உரியதாக இருக்கும். இவற்றை அவர்கள் சில கட்டுப்பாடுகளுடன் நீங்கள் பயன்படுத்த அனுமதிப்பர்.
தனியுரிமை மென்பொருட்கள் காசுகொடுத்து வாங்கப்பட வேண்டியனவாக இருக்கும். அல்லது அவை இலவச மென்பொருட்களாக இருக்கும்.
ஆப்பிள் மாக்கின்டோஷ் இயங்குதளம் ஒரு தனியுரிமை மென்பொருள். இதனை நீங்கள் காசு கொடுத்து வாங்க வேண்டும். "win zip" ஒரு தனியுரிமை மென்பொருள் ஆனால் காசுகொடுத்து வாங்கத்தேவயில்லை. இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச மென்பொருள்.
பெரும்பாலும் தனியுரிமை மென்பொருட்கள் தமது உரிம ஒப்பந்தத்தில் தாம் உங்கள் மீது விதிக்கும் கட்டுப்பாடுகளை மிகத்தெளிவாகவே வரையறுப்பர். என்ன, நாங்க கேட்டுக்கேள்வி இல்லாமல் License agreement இனை next கொடுத்து கண்ணை மூடிக்கொண்டு தாண்டிப்போவதால் இந்தக் கட்டுப்பாடுகளை பெரும்பாலான வேளைகளில் அறிந்திருப்பதில்லை.
அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் பொதுவில் சொல்வது என்ன என்றால், இந்த மென்பொருள் அவர்களுக்கே சொந்தமானது, அதனை பயன்படுத்துவதற்கான அனுமதியை நீங்கள் சில கட்டுப்பாடுகளுடன் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைத்தான்.
விலை கொடுத்து வாங்கினால் என்ன, இலவச மென்பொருளாய் இருந்தல் என்ன இந்த ஒப்பந்தங்களின் படி அவை தனியுரிமை மென்பொருட்களே ஆகும்.
இவற்றை நாம் ஆங்கிலத்தில் "proprietary Software" என்போம்.
மூடிய மூல மென்பொருள் / மூடிய ஆணைமூல மென்பொருள்
கடந்த சில காலங்களுக்கு முன் வெற்றிகரமான மென்பொருள் வணிக உத்தியாக இத்தகைய மென்பொருட்கள் கருதப்பட்டு வந்தன.
அதனால் இவை பிரபலமானவையாகவும் இருக்கின்றன.
இந்த மென்பொருட்களை உருவாக்குபவர்கள்/ உருவாக்கும் நிறுவனம் மென்பொருளின் மூல நிரலை/ஆணைமூலத்தை (source code) மிக மிக இரகசியமாக பேணுவதோடு தான் மறைத்து வைத்துக்கொள்ளும். மென்பொருள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது, அது எவ்வாறு இயங்குகிறது என்பதைப்பற்றி எல்லாம் பயனர் அறிந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்வார்கள். பயனர்கள் மென்பொருளை பயன்படுத்த மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதே இதன் மறைமுக விளைவு.
ஒரு நிறுவனம், குறிப்பிட்ட பணி ஒன்றைச்செய்யும் மென்பொருளை நேரமும் பணமும் செலவழித்து உருவாக்கும்போது, அதன் இயக்க முறைகளை, ஆணைமூலத்தினை மற்றவர்கள் இலகுவில் பார்த்து அறிந்து தாமும் போட்டியாக மென்பொருட்களை உருவாக்கி விடாமல் தடுப்பதற்கு இம்முறை பெரிதும் உதவுகிறது.
அநேகமாக இன்று கற்பிக்கப்படும் மென்பொருட் கட்டுமான, வடிவமைப்புக் (Software architecture and Design) கோட்பாடுகள் மூடிய ஆணைமூல மென்பொருள் விருதிக்கானவையே
இலவச மென்பொருட்களும் , காசு கொடுத்து வாங்க வேண்டிய மென்பொருட்களும் மூடிய மூலமாக இருக்கலாம்.
நல்ல எடுத்துக்காட்டுக்களாக, blogger, yahoo services, opera browser, google, MS Office போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இதனை ஆங்கிலத்தில் "closed source software" என்போம்.
திறந்த மூல மென்பொருள் / திறந்த ஆணைமூல மென்பொருள்
இது மிகவும் அவதானமாகக் கையாள வேண்டிய சொல்.
வெவ்வேறு அர்த்தங்களில் வெவ்வேறு தேவைகளுக்காக இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
எது திறந்த ஆணைமூல மென்பொருள்?
இதற்கு இரு வேறு பதில்கள் இருக்கின்றன.
1. OSI நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிம ஒப்பந்தத்தைக்கொண்ட மென்பொருட்கள்.
2. மென்பொருளின் ஆணைமூலத்தைக் கிடைப்பில் வைத்திருக்கும் மென்பொருள்.
இந்த இருவேறு பதில்களுக்குரிய மென்பொருட்களும் இன்று இணையம் பூராகவும் திறந்த ஆணைமூல மென்பொருள் என்ற பெயரில் பரந்து கிடக்கின்றன.
இச்சொல் பெரும்பாலும் ஏமாற்று வேலையாகவே பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் கூட திறந்த ஆணைமூலம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. (இந்தத் தொடுப்பைப் போய்ப்பாருங்கள். ச்சும்மா அதிர்ந்து போவீர்கள்!! ) ஆம். அவர்கள் சில மென்பொருட்களுக்கு ஆணைமூலத்தைத் திறந்து வைத்துவிட்டு திறந்த ஆணைமூலம் என்கிறார்கள். இது ஒரு ஏமாற்று நாடகம். மூடிய ஆணைமூல வடிவம் தொடர்ச்சியான தோல்வியைப் பல வழிகளிலும் சந்தித்து வருவதால், தமது நலன்களைக் காத்துக்கொண்டு அதனை எதிர்கொள்ள அவர்கள் இந்த ரெண்டும் கெட்டான் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

அவர்கள் திறந்து வைத்திருக்கும் மூல நிரலை நீங்கள் பார்க்க முடியும் . ஆனால் சுதந்திரமாகப் பயன்படுத்த முடியாது. அதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கும் உரிம ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மூடிய ஆணை மூல மென்பொருட்கள் உறுதியற்றவை, பாதுகாப்பில் மிகப்பலவீனமானவை, வினைத்திறன் குறைந்தவை என்று இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதால், தமது மென்பொருள் சிறந்தது, பாதுகாப்பானது, வினைத்திறன் கூடியது என்பதை விளம்பரப்படுத்த திறந்த ஆணைமூலம் என்கிறார்கள்.
OSI நிறுவனம் இன்று கேலிக்கூத்தாகிப்போய்விட்டது.
வேறு பலர் "திறந்த ஆணைமூலம்" என்ற சொல் பிரபலமாகிவிட்டதால், விளம்பரத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால் எந்தக் கேள்வியும் சிந்தனையும் இல்லாமல் தமது மென்பொருட்களைத் திறந்த ஆணைமூலம் என்கிறார்கள்.
மூடிய ஆணைமூல மென்பொருள் விருத்தி முறை தோல்விகண்டுவிட்டதால் இன்று திறந்த ஆணைமூல விருத்தி முறை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் இச்சொல்லைப் பயன்படுத்தலாமே ஒழிய இச்சொல் அரசியல் ரீதியில் அர்த்தமற்றது.
இச்சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லதென நான் பரிந்துரைக்கிறேன்.
இதனை ஆங்கிலத்தில் "Open Source Software" என்பர்
கட்டற்ற மென்பொருள்
(சுதந்திர மென்பொருள் / தளையறு மென்பொருள் / விடுதலை மென்பொருள் என்றும் சொல்லலாம்)
இவ்வகையில் அடங்கும் மென்பொருட்களே அரசியல் ரீதியில் மிக முற்போக்கானவை.
மற்றைய வகை மென்பொருட்களிலிருந்து கட்டற்ற மென்பொருளை வேறுபடுத்துவது அதன் உரிம ஒப்பந்தமேயாகும்.
குறித்த மென்பொருளின் உரிம ஒப்பந்தம் பின்வரும் சுதந்திரங்களை உங்களுக்குத் தருகிறதா என்று பாருங்கள்.
சுதந்திரம் 0: எந்த நோக்கத்துக்காகவும் மென்பொருளை இயக்குவதற்கான சுதந்திரம்.
சுதந்திரம் 1: மென்பொருள் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கற்றுக்கொள்வதற்கும், உங்கள் தேவைகளுக்கேற்றபடி அதனை உள்வாங்கிக்கொள்வதற்குமான சுதந்திரம் (ஆணைமூலம் கிடைக்கக்கூடியதாக இருப்பது இதற்கு முன்நிபந்தனையாகும்)
சுதந்திரம் 2: மென்பொருளின் படிகளை/நகல்களை/பிரதிகளை மீள் விநியோகம் செய்வதற்கான சுதந்திரம். இதன்மூலம் நீங்கள் உங்கள் அயலவர்களுக்கு உதவ முடியும்.
சுதந்திரம் 3: மென்பொருளை மேம்படுத்துவதற்கும், திருத்தியமைப்பதற்கும் அவ்வாறு திருத்தியமைக்கப்பட்ட மென்பொருளை மக்கள் மத்தியில் விநியோகிப்பதற்குமான சுதந்திரம். இதனால் முழுச் சமுதாயமும் பயன்பெற முடியும். (ஆணைமூலம் கிடைக்கக்கூடியதாக இருப்பது இதற்கு முன்நிபந்தனையாகும்)
இந்தச் சுதந்திரங்களை ஒப்பந்தம் உங்களுக்குத் தருமாயின் அது ஒரு கட்டற்ற மென்பொருளாகும்.
இதில் மென்பொருளின் விலை பற்றி எங்குமே குறிப்பிடப்படவில்லை.

ஆம். கட்டற்ற மென்பொருளை இலவசமாகத்தான் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் எப்போதும் இல்லை. நீங்கள் தாராளமாகக் கட்டற்ற மென்பொருளைக் காசுக்கு விற்கலாம். எந்த தடையும் இல்லை. காசுக்கு விற்கப்படுவதும் கட்டற்ற மென்பொருளே. மேற்கண்ட சுதந்திரங்களை அது பயனருக்கு உறுதிப்படுத்தினால் போதுமானது.
இந்த இடத்திலேயே மாயாவின் பதிவில் "லினக்ஸ் ஒரு இலவச மென்பொருள் இல்லையா?" என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது.
லினக்ஸ் கரு என்பது எப்போதும் விற்கப்படக்கூடாதது அல்ல.
எடுத்துக்காட்டாக லினக்ஸ் கருவினைக் கொண்டிருக்கும் எத்தனையோ இயங்குதளங்கள் காசுக்கு விற்கப்படுகிறது. அப்போது நீங்கள் அங்கே உள்ளடக்கப்பட்டுள்ள லினக்ஸ் கருவினைக் காசு கொடுத்தே வாங்க வேண்டும். மிக நல்ல எடுத்துக்காட்டு நீங்கள் நன்கறிந்த ரெட்ஹாட் ( red hat GNU/Linux)
இதன் Enterprise edition இலவசமல்ல. ஆனால் அது கட்டற்ற மென்பொருள்.
வேறும் சில கட்டற்ற மென்பொருட்கள் இலவசமல்ல.
கட்டற்ற மென்பொருட்கள் பொதுவாகப்பயன்படுத்தும் நன்கறியப்பட்ட உரிம ஒப்பந்தம் GPL ஆகும் (க்னூ பொதுமக்கள் உரிமம்) இது தவிர வேறு பல உரிமங்களும் உண்டு.
கட்டற்ற மென்பொருட்கள் ஆங்கிலத்தில் Free software எனத் துரதிஷ்ட வசமாகப் பயன்படுத்தப்படுவதே இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் உண்மையில் இந்தச்சொல் freedom software என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகிறது.
கட்டற்ற மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருள்
இது அடிக்கடிச் சண்டைபோட்டுக்கொண்டிருக்கும் இரு முகாம்களைச் சமாளித்து ஒன்றிணைப்பதற்கான முயற்சியாகக் கண்டுபிடிக்கப்பட்ட சொல்.
பல திறந்த ஆணைமூலக் காரருக்கு தம்மைக் கட்டற்ற மென்பொருள் என்று மட்டும் சொல்வது பிடிக்காது. பல கட்டற்ற மென்பொருள் காரருக்குத் தம்மைத் திறந்த ஆணைமூலம் என்று சொல்வது பிடிக்காது.
கட்டற்ற மென்பொருட்கள் எல்லாம் திறந்த ஆணைமூலமே அதில் பிரச்சினை இல்லை. சில திறந்த ஆணைமூல மென்பொருட்களும் கட்டற்றவை. எனவே இருவரும் ஓர் உடன்பாடு கண்டு இந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
மேற்சொன்ன நான்கு சுதந்திரங்களைக் கொடுக்காத திறந்த ஆணைமூல மென்பொருட்கள் இந்த வகைக்குள் அடங்காது.
மிக மிக மோட்டுத்தனமான எளிமையாகச்சொன்னால் (;-), கட்டற்ற மென்பொருட்களும் , நல்ல திறந்த ஆணைமூல மென்பொருட்களும் இந்த வகைக்குள் அடங்கும். கெட்ட திறந்த ஆணைமூல மென்பொருட்கள் இந்த வகைக்குள் அடங்காது.

ஆங்கிலத்தில் இது FOSS எனப்படுகிறது. ( Free and Open Source Software)
பிரான்சியர்கள் இதனை FLOSS என்கிறார்கள். அதாவது Free/Libre/Open Source Software.
லினக்ஸ்
இதுவும் மிகத்தவறாகப் பயன்படுத்தப்படும் சொற்களிலொன்று.
உண்மையில் லினக்ஸ் என்பது இயங்குதளத்தின் அடிப்படையாய் அமையும் கருனி யாகும் (kernel)
Linus என்பவர் இக்கருனியை உருவாக்கினார். கருனி இயங்குதளமொன்றின் இன்றியமையாத கூறாகும். இயங்குதளத்தில் வேறு இன்றியமையாத பாகங்களும் உண்டு.
இன்று நாம் பொத்தாம்பொதுவாக லினக்சஸ் என்று சொல்லும் இயங்குதளங்கள்(Operating Systems) லினக்ஸ் கருனியினையும் மிகுதி GNU பாகங்களையும் கொண்டிருக்கிறது.
GNU என்பது எண்பதுகளில் ரிச்சர்ட் ஸ்டால்மன் என்பவரால் உருவாக்க முயலப்பட்ட முழுமையான கட்டற்ற இயங்குதளமாகும். அவ்வியங்குதளத்தின் கருனியாக லினக்ஸ் பரவலக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. லினக்ஸ் இல்லாத க்னூ இயங்குதளங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக Nexanta வினை சொல்லலாம். இது தனது கருனியாக Open solaris இனைக் கொண்டிருக்கிறது.
ஆகவே இக்கட்டற்ற இயங்குதளத்தினை லினக்ஸ் என்று சொல்வது மிகத்தவறனதாகும். GNU/Linux என்றே சொல்ல வேண்டும்.

லினக்ஸ் என்று பரவலாக அறியாமை கரணமாகவே பயன்படுத்தப்படுகிறது.
இப்பதிவில் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பான மேலதிக விளக்கங்கள் தேவைப்பட்டால், சந்தேகங்கள் இருந்தால், முரண்பாடுகள் இருந்தால், பின்னூட்டமிடுங்கள். பின்னூட்டங்கள் வழியாக இவை தொடர்பான கேள்வி-பதில் ஆவணம் ஒன்றை உருவாக்கலாம்.
கட்டுமானத்துறையும் இந்த வரைகலையும் இப்போது பிரிக்கமுடியாத அளவுக்கு போய்விட்டது.விண்டோஸில் இதன் தொடர்பில் பல மென்பொருட்கள் இருந்தாலும் அடிச்சிக்கமுடியாத அளவுக்கு உயர்ந்து நிற்பது என்னவோ “AutoCad" தான்.
இதை விண்டோஸில் புரிந்துகொள்வதற்குள் நான் படாத பாடுபட்டேன்,ஆதாவது எந்த வகுப்புக்கும் போகாமல் வெறும் கேள்வி ஞானத்துடன் முயற்சித்தேன்.கொஞ்ச நாள் விடாது விழுந்து பிறகு அலுத்து “சீ இந்த பழம் புளிக்கும்” என்று விட்டெரிந்துவிட்டேன்.
ஒரு சமயத்தில் வர வேண்டிய பிராஜட் நேர கால தாமதம் ஆக கம்பெனி செலவிலேயே அனுப்பி படிக்கவைத்தார்கள்.ஏற்கனவே மண்டைக்குள் கொஞ்சம் போட்டு வைத்திருந்ததால் ஒரு வார கோர்ஸில் தேவையானவற்றை பிடித்துக்கொண்டுவிட்டேன்.
புது பிராஜட் வந்தவுடன் வேறு இடம்,புதிய தலைவர் என்றானவுடன் கணினியும் புதிதாக வாங்கப்பட்டது.தேவையான மென்பொருள் பட்டியலில் ஆட்டோகேட்டும் போட்டு கொடுத்தேன்.
அதி வேக புது கணினி கிடைத்தது அத்துடன் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும் தலைவரும் வாய்த்தார். :-)
மென்பொருள் வாங்குபவதில் சுணக்கம் தெரிந்தது.சரி, சும்மாக இருக்காமல் கம்பெனி IT ஆளுங்களுக்கு ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டேன்,ஆதாவது லினக்ஸில் இலவசமாக கிடைக்கக்கூடிய "QCAD" உள்ளது அதை இப்போது US 50 டாலருக்கு விற்கிறார்கள்,வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்றேன்.
அவ்வளவு தான்,உடனே ஒரு பழைய கணினியில் ரெட் ஹேட் லினக்ஸை போட்டு கொடுத்துவிட்டார்கள்.அதில் வரைபடம் போடப்போகும் போது தான் ஆட்டோகேட்க்கும் அதற்கும் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருந்தது தெரிந்தது.
சரியான விளக்கப்புத்தகம் இல்லாததாலும் சொல்லிக்கொடுக்க யாரும் இல்லாததாலும் போராட ஆரம்பித்தேன்.விடை கீழே உள்ளது.
ஆர்வம் உள்ளவர்கள் அனுபவிக்கவும்.
இன்னும் புரிந்துகொள்ள அதிகம் இருந்தாலும் சிறிய நிறுவனங்களுக்கு இது சரியான விலையே இல்லாததாலும் பொருத்தமாக இருக்கும்.நான் உபயோகிப்பது பழைய வர்சன்.
புதிய டிரைல் வர்சனில் 10 நிமிடங்கள்,மொத்தமாக 100 நிமிடங்கள் இலவசமாக உபயோகிக்கலாம்.
ஐம்பது வெள்ளிதானா!! முயற்சிக்கலாம்.
கீழே சொல்லப்பட்டு இருக்கின்ற விபரங்கள் லினக்ஸில் வேலை செய்பவர்களுக்கு அதுவும் install shield மூலம் தரப்படுகிற நிறுவு கோப்புகளை உடைக்க உதவும்.
என்ன தலையை சுத்துகிறதா? எனக்கும் அப்படி சுத்தி தான் இப்போது தான் தெளிவடைந்தேன்.நான் தெளிவடைந்தால் போதுமா? நீங்கள் குழம்பவேண்டாமா?
தொடருவோம்.
இந்த லினக்ஸில் ஒரு வன்பொருளை வேலைசெய்வதற்குள் சில சமயம் தாவு தீர்ந்துவிடும்.ஊரோடு ஒத்துப்போய் பலர் உபயோகப்படுத்தும் வன் பொருளை உபயோகித்தால் பிழைத்தீர்கள் அப்படியில்லாவிட்டால் தேடித்தேடியே களைத்துவிடுவோம்.அதனால் என்னவோ பலரும் லினக்ஸ் பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.நான் அப்படியில்லை,வேலை செய்யும் வரை விடமாட்டேன் இல்லாவிட்டால் இதற்கு மேல் முடியாது என்றபட்சத்தில்
வேறு வேலை பார்க்க கிளம்பிவிடுவேன்.
இப்போதைக்கு எனக்கு தண்ணிகாட்டிக் கொண்டு இருக்கும் வன்பொருள் “கம்பியில்லா” அடாப்டர்.
கணினி மாற்றுபவதற்கு முன்பு பழைய புதினத்தில் சரியாக வேலைசெய்த அடாப்டர் புதிதில் வேலை செய்ய மறுத்தது.இன்றைய காலக்கட்டத்தில் இணைய இனைப்பு இல்லாவிட்டால் எந்த இயங்குதளமும் ஆக்ஸிஜன் இல்லாத செவ்வாய் போல் தான்.அதனால் எப்படியாவது இணைய இணைப்பை பெறுவதில் முட்டி மோதிக்கொண்டிருந்தேன்.பல வழிகள் செய்தும் இன்றுவரை கிடைக்கவில்லை.பல வன்பொருள் நிறுவனங்கள்
விண்டோஸுக்கு மாத்திரம் டிரைவர்கள் வழங்குவதால் அதை உடைத்து அதிலிருந்து லினக்ஸுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டார்கள்.அப்படி உடைக்க ஆரம்பிக்கும் போது அதிலும் ஆயிரம் தலைவலிகள் இருப்பது தெரிந்தது.
இந்த நிறுவல் கோப்புகள் சுறுக்கப்பட்டு இருந்தாலும் அதனுள் இருக்கும் கோப்புகளை விரிவுபடுத்தி அதனுள் இருக்கும் .inf மற்றும் .sys கோப்புகளை எடுப்பது என்பது ஒரு பிரம்மபயத்தனம்.இந்த இரு கோப்புகள் இருந்தால் லினக்ஸில் உள்ள ndiswrapper என்ற மென்பொருள் மூலம் அடாப்டருக்கு தேவையான டிரைவர்களை நிறுவிவிட்டால் ஓரளவு(ஓரளவு தான்) பிரச்சனையை தீர்த்துவிடலாம்.
இந்த நிறுவல் கோப்புகளை விரிவாக்க சரியான இலவச மென்பொருள் கிடைக்காமல் இருந்தது.கூகிளாண்டவரிடம் தேடல் முறையை வித்தியாசப்படுத்தி கேட்ட போது ஒரு மென்பொருளை காண்பித்தது அத்தோடு அதை எப்படி நிறுவுவது அதன் மேல் விளக்கங்களும் அருமையாக இங்கு சொல்லியிருந்தார்கள்.அதன் படி அந்த மென்பொருளை தரவிரக்கி ஜிப் மூலம் விரிவாக்கி அதனுள் (release கோப்பின் உள்)இருக்கும் i6comp என்னும் கோப்பை /windows உள்ளே வைத்துவிடுங்கள்.நிறுவல் எதுவும் கிடையாது.இதை கீ பாயிண்டு மென்பொருள் என்கிறார்கள்.இந்த மாதிரி மென்பொருளை command prompt யில் மூலம் வேலை வாங்கவேண்டும்.
கோப்பை வைத்தாகிவிட்டதா?
இப்போது விண்டோஸ் முலம் Command Prompt க்கு வாருங்கள்,அதில் பிராம்ப்ட் வந்தவுடன் "i6comp" என்று தட்டச்சு செய்து எண்டரை அழுத்துக்கள். இந்த மென்பொருளை உபயோகிக்க தேவையான கட்டளைகளை காண்பிக்கும்.நமக்கு வேண்டியது .inf and .sys மட்டுமே.அதனா ல் அடாப்டரின் .exe கோப்பை ஏதாவது ஜிப் மூலம் திறந்து அதன் கோப்புகளை ஏதோ ஒரு போட்டியில் போட்டு வைக்கவும்.அதில் நமக்கு தேவை கீழ்கண்ட 3 கோப்புகள் மாத்திரம்.
1.data1
2.data.htr
3.data2
மீதமுள்ளவற்றை நீக்கிவிடலாம்.
இப்போது திரும்ப command prompt க்கு வந்து மேலே சொன்ன கோப்புகள் உள்ள இடத்துக்கு வாருங்கள்.
>i6comp e -r data1.cab
என்று கொடுத்து எண்டரை அழுத்துக்கள் அவ்வளவு தான்.படத்தில் கண்டவாறு விரிவாக்கி அதன் போல்டரிலேயே கொண்டுபோய் சேர்த்துவிடும்.அதனுள் நமக்கு தேவையான .inf and .sys கோப்பும் இருக்கும்.
ஆமாம் இது இரண்டும் கிடைத்தால் வேலை செய்யுமா?
தெரியாது வீட்டுக்கு போய் தான் முயற்சிக்கனும். :-))
லினக்ஸ் உபயோகப்படுத்துபவர்கள் ஒன்று அதை தன் வன்பொருளில் நிறுவி அதனுடன் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்,மற்றவர்கள் அவ்வப்போது ஊறுகாய் தொட்டுக்கொள்கிற மாதிரி லைவ் வட்டு முறையில் இயக்கிக்கொண்டு இருப்பார்கள்.
இப்போது மூன்றாவது தலைமுறைக்காக பென் டிரைவில் நிறுவக்கூடிய முறையை போன வாரம் இங்குள்ள பத்திரிக்கையில் போட்டிருந்தார்கள்.அது உங்கள் பார்வைக்காக.
தமிழில் விளக்கலாம் என்று தான் நினைத்தேன்.இதை யார் பார்க்கப்போகிறார்கள் என்ற எண்ணத்துடன் படத்தை மற்றும் போட்டுவிடுகிறேன்.அதுவே மிகவும் விவரமாக இருக்கும்.
நன்றி: தி ஸ்டிரெயிட்ஸ் டைம்ஸ்
கிருஷாந்தன் வாங்கித்தந்த புதிய செல்பேசியோடு எனது வாழ்க்கையில் முதன்முறையாக புளூட்டூத் வரவளிக்கிறது.
புளூட்டூத் செல்பேசியை வைத்துக்கொண்டு என்ன விளையாட்டு விளையாடலாம் என்று இணையத்தைக்குடைந்து தேடியபோது சுவாரஸ்யமான இந்தச்சிறு மென்பொருள் கிடைத்தது.
கோப்புப்பரிமாற்றம், குரல் பரிமாற்றம் என்பதையெல்லாம் தாண்டி, புளூட்டூத்தின் பாரிய குறைபாடொன்றை அழகாகப்பயன்படுத்தி இந்த மென்பொருள் செய்யப்பட்டிருக்கிறது.
இது என்ன செய்யும்?
நீங்கள் அலுவலகத்தில் கணினி முன் இருக்கிறீர்கள். அவசரமாக சிறுநீர்கழிப்பதற்காக எழுந்து போய்விடுகிறீர்கள். நீங்கள் எழுந்து அப்பால் சென்று விட்டீர்கள் என்பதை உங்கள் கணினி உணர்ந்து தன்னை பூட்டி வைத்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
இந்த உதவியைத்தான் Blueproximity என்ற இம்மென்பொருள் செய்கிறது.

இம்மென்பொருளை உங்கள் GNU/Linux கணினியில் நிறுவி, உங்கள் குறித்த செல்பேசியின் புளூட்டூத் முகவரியை கண்காணிக்குமாறு அமைத்துக்கொண்டீர்களானால் சரி. உங்கள் செல்பேசி உங்களோடு அப்பால் போகும்போது கணினித்திரை தானாகப் பூட்டப்படும். எவரும் கணினியைப் பயன்படுத்த வேண்டுமானால் கடவுச்சொல் தெரிந்திருக்கவேண்டும்.
நீங்கள் அருகில் வந்தவுடன் திரை தானாகவே திறந்துகொள்ளும். நீங்கள் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்யலாம்.
எவ்வளவு தூரம் போனதும் திரையைப் பூட்ட வேண்டும் என்பதை நீங்கள் உங்கள் விருப்பப்படி அமைத்து வைத்துக்கொள்ளலாம்.
புளூட்டூத் நிரலாக்கத்துக்கு மிகச்சிறப்பான இயங்குதளம் GNU/Linux. நீங்களும் இத்தகைய பல விளையாட்டுக்களை விளையாடிப்பார்க்கலாம்.
தற்போது பைத்தன் கணிமொழியையும் செல்பேசிகளின் புளூட்டூத் சேவைகளையும் வைத்து வேறென்ன விளையாடலாம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
சுவையான தகவல்கள் இருந்தால் அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்ளலாம்.
தபுண்டு (தமிழ் உபுண்டு) (பார்க்க: முன்னைய வலைப்பதிவொன்று) பொதியின் Gutsy யுடன் ஒத்திசையும் பதிப்பை இன்றுமுதல் தரவிறக்கிக்கொள்ளலாம்.
புதிய பொதி தபுண்டு வலைமனையில் தரவேற்றப்பட்டிருக்கிறது.
பொதி, "tabuntu_7.10.1_i386" எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
அளவு 4.1 MB.
நிறுவலில், பயன்பாட்டில் ஏற்படும் சிக்கலகளை, வழுக்களை உடனுக்குடன் எனக்கு அறிவிப்பதன்மூலம் மற்றவர்களுக்கு உதவுங்கள். தபுண்டு நிரலாக்கத்திலும் தபுண்டு செயற்றிட்டத்திலும் பங்கெடுக்க வாருங்கள்.
இந்தத் தமிழ் உபுண்டு பதிப்பில் பாரிய மாற்றங்கள் பலவற்றைச் செய்வதாக உத்தேசித்திருந்தேன். நேரமின்மை காரணமாக அவ்வாறெதனையும் செய்து முடிக்க முடியவில்லை. 7.10.2 அல்லது 7.10.3 இல் திட்டமிட்டபடி பெரியளவான மாற்றங்கள் இருக்கும்.
இருந்தாலும் இந்தப்பதிப்பில் பல கவனிக்கத்தகுந்த மாற்றங்கள் உண்டு.
1. பொதிகள் அத்தனையும் கட்ஸி பொதிக்களஞ்சியத்திலிருந்து (Gutsy repositories) பெறப்பட்டு இற்றைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
2. m17n-contrib பொதி நீக்கப்பட்டுள்ளது. பதிலாக m17n தமிழ் உள்ளீட்டு முறைகள் தனியாக நிறுவப்படுகின்றன.
3. www.wsws.org போன்ற வலைத்தளங்கள் இன்னமும் பயன்படுத்திக்கொண்டிருப்பதால் tam-maduram ஆஸ்கி எழுத்துரு சேர்க்கப்பட்டுள்ளது.
4. பாமினி விசைப்பலகை வடிவத்தை பயன்படுத்துபவர்களுக்கான "பாலினி" தன்னியக்கமாக நிறுவப்படுகிறது.
5. குழப்பங்களைத் தவிர்க்குமுகமாக நீங்கள் பயன்படுத்தும் உபுண்டு பதிப்பைச் சோதனையிட்டுத் திருப்திகண்டால் மட்டுமே நிறுவல் தொடரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
1. ஓப்பன் ஆபீசில் தமிழ் எழுத்துருவை இயல்பிருப்பாக்குவதற்கான வழிமுறை இன்னும் எனக்கு கண்டுபிடிக்க முடியாதிருப்பதால் இம்முறையும் அதே பழைய அரைகுறை முறை மூலமே இப்பணி செய்யப்படுகிறது.
2. scim மென்பொருள் ஏனைய மென்பொருட்களோடு சேர்ந்து இயங்கும் போது ஏற்படும் வேகக்குறைவு, முறிவு போன்றன தொடரக்கூடும். இதை சரிப்படுத்துவது scim மேநிலை தொழிநுட்பவியலாளர்களுடைய பணி.
3. திறந்த மூலமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே இம்முறையும் பாமினி, சூரியன், tam-maduram எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
4. நிறுவலின் ஆரம்பத்தில் இம்முறையும் உங்களைக்கேட்காமலே இடைமுகப்பின் எழுத்துருவை தபுண்டு மாற்றும். (அடுத்த பதிப்பில் சரி செய்து விடுகிறேன் அதுவரை இம்முறைப்பாட்டைச்செய்த பழனி ராஜா மன்னிக்கவும்)
5. தமிழ் விசை நீட்சி சேர்க்கப்படவில்லை. சில குழப்பங்கள் உண்டு. அடுத்த பதிப்பில் எதிர்பார்க்கலாம்.
== நன்றி ==
== ஆதரவு ==
தபுண்டு தொடர்பான உதவிகளுக்கும் ஆதரவுக்கும் இந்த வலைப்பதிவின் மூலமோ மின்னஞ்சல் மூலமோ உரையாடுங்கள்.
நிவேதாவின் வலைப்பதிவில் வரலாற்றின் முப்பரிமாண இயல்பு பற்றி உரையாடியதைத்தொடர்ந்து முப்பரிமாணத்தின் பால் ஆர்வம் ஏற்பட்டுப்போனது ;-)
== முப்பரிமாணப் படம் என்றால் என்ன? ==
(என் பழைய பதிவொன்றையும் பார்த்துவிடுங்கள் )
சாதாரண படங்கள் தட்டையானவை. இரு பரிமாணங்களைக் கொண்டவை. அவை நீளம், அகலம் ஆகியவை மட்டுமே. நேரில் பார்க்கும் காட்சிக்கும் படத்தில் காணும் காட்சிக்கும் இடையிலான பாரிய வித்தியாசம் இந்த முப்பரிமாணத்தோற்றம்தான். ஆழம், தூரம் போன்ற மூன்றாவது பரிமாணத்தை நாம் வெற்றுக்கண்களால் பார்த்து அனுபவிக்கலாம். படத்தில் முடியாது.
படத்தில் பொண்ணு மாப்பிள்ளைக்கு அருகில் நீங்கள் நின்றால், யார் முன்னுக்கு, யார் பின்னுக்கு நிற்கிறீர்கள் என்பதை சரியாகச் சொல்ல முடியாது. மாப்பிள்ளைக்கு முன்னால் நிற்கும்போது, சிலவேளை படத்தில் மாப்பிள்ளைக்கு அருகாக முட்டிக்கொண்டு நிற்பதுபோல தோன்றிச் சங்கடங்களும் ஏற்படும் (வாசிப்பவர் ஆணாக இருந்தால் உங்களுக்கு ஏற்றவாறு பால்மாற்றம் செய்துகொள்ளுங்கள்).
இந்த சிக்கல் எல்லாம் தட்டையான இருபரிமாணப்படங்களில் ஏற்படுவது. முப்பரிமாணப்படம் என்றால் மாப்பிள்ளைக்கும் உங்களுக்கும் இடையில் உள்ள தூர இடைவெளி நன்றாக விளங்கும்.
== முப்பரிமாணம் எப்படி உருவாகிறது? ==
எங்களுக்கு இரு கண்கள் இருப்பதால்தான் முப்பரிமாணத்தோற்றத்தினை நாம் பார்க்கிறோம். இருகண்களும் உண்மையில் ஒரே படத்தை எம் மூளைக்கு அனுப்புவதில்லை. ஒரு காட்சியின் வெவ்வேறுபட்ட கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களையே இரு கண்களும் மூளைக்கு அனுப்புகின்றன. மூளை அந்த இரு படங்களையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும்போது முப்பரிமாணத்தோற்றம் உருவாகிறது.
செயற்கையாக நம் முப்பரிமாணத்தினை உருவாக்க வேண்டி வரும்போது, மூளையை சற்று ஏய்க்க வேண்டியுள்ளது. அதாவது, செயற்கையாக நாம் இரு கண்களுக்கும் வெவ்வேறு தகவல்களை வழங்கவேண்டும்.
அப்போதுதான் மூளை ஏமாந்து தான் முப்பரிமாணத்தோற்றத்தினைப்பார்ப்பதாக நினைத்துக்கொள்ளும்.
இப்படி இரு கண்களுக்கும் இருவேறுபட்ட படத்தகவல்களை வழங்கவென ஏராளமான தொழிநுட்பங்கள் இருக்கின்றன.
அவற்றுள் நம் வீட்டில் செய்துபார்க்க வசதியான எளிமையான தொழிநுட்பம், சிவப்பு- நீல கண்ணாடித்தொழிநுட்பம் தான்.
தொடர்ச்சியாக இரு சுட்டி விகடன் இதழ்கள் முப்பரிமாணப்படங்களுடனும் கண்ணாடியுடனும் வந்ததைத்தொடர்ந்து நானும் தம்பிமாரும் முப்பரிமாணப்படம் ஒன்றை உருவாக்குவது குறித்துத் தேடத்தொடங்கினோம்.
/* நீங்களும் சிவப்பு, cyan/green/blue கண்ணாடிகளை, பிளாத்திக்கு கண்ணாடிகளை பயன்படுத்தி இந்த கண்ணாடியை செய்துகொள்ளலாம் **/
சில அடிப்படைக் கோட்பாடுகளையும் செய்முறைகளையும் கற்றுக்கொண்ட பிறகு "Set" ஆகி செயலில் இறங்கினோம்.
பிரசன்னாவின் செல்பேசியில் கமரா உள்ளது. அதனைப்பயன்படுத்துவதாக முடிவு செய்தோம்.
பின்வரும் பொருட்களைத் தயார்படுத்தி வைத்துக்கொண்டோம்.
== படமெடுத்தல் ==
1. ஒரு வெள்ளைத்தாளில் நேர்கோடொன்றினைக் கீறி, அதில் அடிமட்டத்தினைப்பயன்படுத்தி 3 அங்குல இடைவெளியில் இரு குறுக்குக்கோடுகளை போட்டுக்கொண்டோம் (படத்தில் காட்டப்பட்டவாறு)

2..படமாக்கப்பட வேண்டிய காட்சியைத் தெரிவு செய்வதில் அனுபவத்தின் வழி சில உண்மைகளை உணர்ந்துகொண்டோம்.
3. காட்சியைப் படம்பிடிக்க வேண்டிய கோணத்தைத் தெரிவு செய்து அதில் சிறு மேசை ஒன்றினை வைத்தோம்.
4. மேசை மீது, கோடு வரையப்பட்ட வெள்ளைத்தாளை அசையாதவாறு பொருத்திக்கொண்டோம்.
5. தாளின் கோட்டில் சரியாக பொருந்தும்படி செல்பேசியை வைத்தோம். அதன் ஒரு விளிம்பினை முதலாவது குறுக்குக்கோட்டோடு சரியாக பொருந்தும்படி அமைத்துக்கொண்டோம். (அதாவதுங்க, சரியாக 3 அங்குல இடைவெளியில் சற்றும் பிசகாமல் இரண்டு படங்கள் வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகள்தான்)
6. வெற்றிகரமாக முதலாவது படத்தினை எடுத்தோம்.
7. எதையும் அசைக்காது, செல்பேசியை மட்டும் கிடைக்கோட்டின் வழி அசைத்து, மூன்றங்குல தூரத்தில் அமைந்த இரண்டாவது குறுக்குக்கோட்டோடு மறுபடி விளிம்பினைப் பொருந்தச்செய்தோம்.
8. இரண்டாவது படத்தினையும் வெற்றிகரமாகப் பிடித்துவிட்டோம்.
== கணினியில் ==
1. எடுத்த இரண்டு படங்களையும் கணினியில் சேமித்துக்கொண்டோம்.
2. இடதுபக்கம் எடுத்த படத்தை "இடம்.jpg" என்றும் , வலது பக்கம் எடுத்த படத்தை "வலம்.jpg" என்றும் பெயரிட்டுக்கொண்டோம்.

3. வலம்.jpg இனை இடதுசொடுக்கி gimp இல் திறந்துகொண்டோம்.
4. ctrl +l இனை அழுத்தி "layers" சாளரத்தை பெற்றுக்கொண்டோம்.

5. layers சாளரத்தைப் பயன்படுத்தி புதிய layer ஒன்றினை உருவாக்கினோம். ( ctrl + shift + n)
6. shift + b இனை அழுத்தி வண்ணம் நிரப்பும் கருவியினைப் பெற்றுக்கொண்டோம்.
7. சிவப்பு வண்ணத்தை தெரிவு செய்துகொண்டோம். (மிகச்சரியான சிவப்பு வண்ணத்தின் குறியீட்டெண் ff0000) படத்தில் மஞ்சள் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள இடங்கள் இந்த படிமுறையில் பயன்படுத்தப்படுகின்றன.

8. layers சாளரத்தில் புதிதாக சேர்த்த layer இனை தெரிவு செய்து அதனை சிவப்பு வண்ணத்தால் நிரப்பினோம். பின்னர் அந்த layer இனை "screen" mode இற்கு மாற்றிக்கொண்டோம். இதன்போது படம் சிவப்பு வண்ணத்தில் தெரியும்.

9. சிவப்பு layer தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே ctrl + shift + d இனை அழுத்தி அதனை நகல் செய்துகொண்டோம். இப்போது மற்றுமொரு சிவப்பு layer உங்கள் layers சாளரத்தில் தோன்றும்.
10 புதிதாகத்தோன்றிய சிவப்பு layer இனை தெரிவு செய்து படம் உள்ள சாளரத்தின் menu வழியாக color -> invert இனை பயன்படுத்தி முற்றாக எதிர்மறை நிறத்துக்கு கொண்டுவந்தோம். ( இதன்போது படம் இருந்த இடத்தில் வெள்ளையாக இருந்தது)
11. ctrl + alt + o இனை அழுத்தி "இடம்.jpg" படத்தினை புதிய layer ஆகத் திறந்துகொண்டோம். இதன்பின் புதிய படம் layers சாளரத்தில் இன்னுமொரு layer ஆகக் காட்சி தந்தது.

12. இடம். jpg இன் கீழே காணப்பட்ட ( layers சாளரத்தில்) cyan நிற layer இனை மவுசால் தூக்கி இடம். jpg படத்துக்கு மேலாக விட்டுவிட்டோம். இதன்போது படம் cyan நிறத்தில் காட்சியளித்தது.

13. அடுத்து layers சாளரத்தில் சிவப்பு நிற layer மற்றும் background ஆகியவற்றுக்கு அருகிலிருந்த கண்வடிவ சின்னத்தை அழுத்தி தெரியாமலாக்கிவிட்டு ctrl + m இனை அழுத்தி எஞ்சியிக்கும் cyan layer இனையும் இடது படத்தினையும் ஒன்றிணைத்தோம்.

14. இதேபோன்று புதிதாக உருவான cyan படத்தினை அருகிலிருக்கும் கண் சின்னத்தினை அழுத்தி மறைத்துவிட்டு சிவப்பு layer மற்றும் background layer களுக்கு அருகிலிருந்த கண் சின்னத்தினை அழுத்தி தெரிய வைத்துவிட்டு ctrl + m இனை அழுத்தி சிவப்பு படங்களை ஒன்றிணைத்தோம்.
15. இப்போது cyan படம் உள்ள layer இனைத் தெரிவு செய்து அதனருகிலுள்ள கண் சின்னத்தினை அழுத்தி தெரியவைத்துவிட்டு அதனை multiply mode இற்கு மாற்றிக்கொண்டோம். (படத்தை அவதானிக்கவும்)

16. முப்பரிமாணப்படம் தயாராகிவிட்டது. படத்தினை save as கொடுத்து "முப்பரிமாணம்.png" என்ற பெயரில் சேமித்துக்கொண்டோம்.
எம் கைவசமிருந்த சிவப்பு - cyan கண்ணாடியை பயன்படுத்தி மூவரும் நாம் உருவாக்கிய முப்பரிமாணப்படங்களை அதன் ஆழ அகலங்களோடு பார்த்து மகிழ்ந்தோம்.

ஒளிப்படப்பிடிப்பில் ஆர்வமுள்ள பிரசன்னா கொஞ்சநாளைக்கு முப்பரிமாணப்படங்களை பிடித்துக்கொண்டு திரியப்போகிறார்.
"தட்டையான தத்துவங்கள்' , "ஒட்டுமொத்தப்படுத்துபவை" , "முப்பரிமாணத்தை காட்ட மறுக்கும் அதிகாரம்" என்றெல்லாம் விளங்காத தமிழில் எங்கள் "தீவிர" இலக்கியகாரர்களும் அவர்தம் இதழ்களும் விளங்காமல்படுத்திக்கொண்டிருந்தபோது மிகுந்த பயவுணர்வோடு, குற்றவுணர்வோடு படித்திருக்கிறேன். இப்போ நானும் இந்த உலகை முப்பரிமாணமாக படம்பிடித்துக்காட்டப்போகிறேன் எனும்போது மகிழ்ச்சியாக இருக்கிறதூ...! ;-)
== Making of 3d images!! ==
சில நாட்களுக்கு முன்பு தான் வந்த இந்த மேம்பட்ட பகுதி 7.10 ஐ நிறுவலாம் என்று நினைத்து அந்த பேக்கேஜ் மேம்பாட்டை துவங்கினேன்.
முதல் அதிர்ச்சியே "இப்போது சுமார் 650 MB " அளவுக்கு தறவிரக்கம் செய்ய போகிறேன் என்றது. என்னடா இது புது வெர்சன் அவர்கள் வலையில் இருந்து இறக்கினாலே அந்த அளவு தானே இருக்கும்,நாமோ மேம்படுத்த தானே செய்கிறோம் எதற்கு இந்த அளவு தறவிரக்கம் செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் "சரி" என்று சொன்னேன்.
சுமார் 1.30 மணித்துளிகள் ஆகும் என்றது.மானிடரை மட்டும் மூடிவிட்டு வேறு பணிகளை செய்ய ஆரம்பித்தேன்.
அகலப்பட்டை இல்லாதவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுக்காதீர்கள். நொந்து நூலாகிவிடுவீர்கள்.
மாலை 7 மணிக்கு ஆரம்பித்து இரவு சுமார் 9 மணிக்கு முடிந்தது.அதற்க்குப்பிறகு புது வெர்ஷனை நிறுவவா என்று கேட்டது.புதிதாக நிறுவினாலேயே சுமார் 1 மணி நேரம் தான் ஆகும்,சரி தூங்குவதற்கு முன்பு முடிந்துவிடும் என்று நினைத்து அனுமதி கொடுத்தேன்.
அனுமதி கொடுத்தவுடன் அடுத்த பாம் விழுந்தது. ஆதாவது என்னுடைய கணினியை மேம்படுத்த சுமார் 6 மணி நேரமாகும் என்றது.இரவு 10.30 மணிக்கு மீதம் 4 மணி நேரம் இருக்கு என்றது.மறுபடியும் மானிட்ரை மூடிவிட்டு தூங்க போய்விட்டேன்.
காலை 6 மணிக்கு பார்க்கும் போது சில விபரங்களை மாற்ற என் அனுமதி கேட்டு அப்படியே நின்று போயிருந்த்து.எப்போது நின்றது என்று தெரியவில்லை.அனுமதி கொடுத்தவுடன் இன்னும் 1.30 மணி நேரம் ஆகும் என்றது.
எல்லாம் நல்ல படியாக எல்லாம் முடிந்து கணினி ஆரம்பித்து புது வர்சன் உள்ளே போனது.இப்போது கணினி திரை நல்ல ரெசலூஷனில் வந்தது. ஆனால் கம்பியில்லா இணைய இணைப்பு தான் வரவில்லை.
Ndiswrapper திரும்ப நிறுவ வேண்டும் போல் இருக்கிறது.ஒன்று மட்டும் நன்றாக உணரமுடிந்தது. மற்ற லினக்ஸை விட ஆரம்பிக்கும் நேரமும் மூடும் நேரமும் கணிசமாக அதிகரித்துள்ளது.